ஹிரோஷிமா நினைவு தினம்…

ஆகஸ்ட் 6ஆம் தேதி என்றாலே ஹிரோஷிமா மற்றும் நாகசாகி குண்டுவீச்சும் அதனால் பறிபோன உயிர்களும் தான் முதலில் நினைவுக்கு வரும்.

இரண்டாம் உலகப் போர், மனித குலத்தின் இருண்ட காலகட்டங்களில் ஒன்று என்றே கூறலாம். ஜெர்மனி, போலந்து மீது செப்டம்பர் 1, 1939 அன்று படையெடுத்த பின்னர் தான் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது.

டிசம்பர் 7, 1941 அன்று ஹவாயில் உள்ள பேர்ல் ஹார்பரில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தின் மீது ஜப்பானிய இராணுவம் திடீர் தாக்குதலை நடத்தியதை அடுத்து, அமெரிக்கா, ஜப்பான் மீது ஒரு போரை அறிவித்தது. இந்தப் போரில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாடுகள் தீவிரமான மோதலில் ஈடுபட்டது.

தொடர்ந்து 1945-ல் இதே நாளில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரம் மீது ‘லிட்டில் பாய்’ எனும் அணுகுண்டை அமெரிக்கா வீசியது. அப்போது தான் போர்க்களத்தில் முதல் முறையாக அணுகுண்டு பயன்படுத்தப்பட்டது. ஹிரோஷிமாவில் குண்டு விழுந்த இடத்திலிருந்து சுமார் 280 மீட்டர் சுற்றளவுக்குள் இருந்த அனைத்தும் ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் நகரமே சாம்பலானது.

ஹிரோஷிமாவில் மட்டும் 1.40 லட்சம் மக்களின் உயிர்கள் பறிபோனது. அணுகுண்டிலிருந்து வெளிப்பட்ட வெப்பத்தின் அளவு 3 லட்சம் டிகிரி செல்சியஸ். அணுகுண்டினால் ஏற்பட்ட கதிர்வீச்சினால் பல தலைமுறையினர் பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் உலக நாடுகளை அச்சுறுத்தியது.

ஆகஸ்ட் 9 அன்று நாகசாகி மீது மற்றொரு குண்டு வீசப்பட்டது. அந்த அணுகுண்டிற்கு `குண்டு மனிதன்’ (FAT MAN) என்று பெயர் சூட்டினர். இந்த அணுகுண்டு வெடிப்பில் சுமார் ஒரு லட்சம் பேர் மடிந்தனர். ஒரு வாரம் பிறகு ஆகஸ்ட் 15 அன்று ஜப்பான் சரணடைந்தது, இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

இன்று ஹிரோஷிமா, அணு ஆயுதங்களின் கொடுமைகளை உலகிற்கு நினைவுபடுத்தும் வகையிலும், அமைதிக்கான ஒரு நினைவுச் சின்னமாகவும் திகழ்கிறது.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்