வில்லனாகவும் நடித்து திறமை காட்டிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
1952 ஆம் ஆண்டு பராசக்தி திரைப்படம் மூலம் திரையுலக பயணத்தை தொடங்கிய சிவாஜிகணேசன், அடுக்கடுக்காக தனது உச்சரிப்புகளால் எல்லோரது கவனத்தையும் ஈர்த்து நடிகர் திலகம் என்ற பெயரையும் பெற்றார். 275 தமிழ் திரைப்படங்களிலும், 9 தெலுங்கு மற்றும் 2 மலையாள திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார் . இதைத் தவிர 17 திரைப்படங்களில் கௌரவ நடிகராகவும் சிவாஜி கணேசன் நடித்துள்ளார்.
அவர் கதாநாயகனாக நடித்ததை நாம் அறிவோம் . அதேபோல் வில்லனாகவும் அந்த நாள் என்ற திரைப்படத்தில் நடித்ததும் பலருக்கும் தெரிந்திருக்கும் . ஆனால் மொத்தம் நான்கு திரைப்படங்களில் சிவாஜி கணேசன் வில்லனாக நடித்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா ?
1953 ஆம் ஆண்டு திரும்பிப் பார் என்ற திரைப்படத்தில் பரந்தாமன் என்று கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
1954 ஆம் ஆண்டு துளி விஷம் என்ற திரைப்படத்திலும் சூரியகாந்தன் என்கிற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார் சிவாஜிகணேசன்.
அடுத்து அதே ஆண்டில் வெளியான அந்த நாள் என்ற திரைப்படத்தில் நடிகர் திலகம் நடித்தார். தமிழில் முதன் முதலாக பாடல்கள் இல்லாமல் வந்த திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
1956 ஆம் ஆண்டு அண்ணாதுரை எழுதிய புதினத்தின் அடிப்படையில் வெளியான ரங்கோன் ராதா திரைப்படத்திலும் வில்லனாக நடித்து அசித்திருப்பார் நடிகர் திலகம்.