சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று, பள்ளப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கள்ளக்குறிச்சி பேருந்து நிற்கும் இடத்தில் சந்தேகத்திற் கிடமாக நின்றிருந்த ஒருவரிடம் விசாரித்ததில், அவர் வைத்திருந்த சாக்குப்பையில் 7கிலோ சந்தனக்கட்டைகள் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், சேலம் சேர்வராயன் வனத்துறையினர் விரைந்து சென்று விசாரித்தனர். அதில் அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலை புதூர் பகுதியைச் சேர்ந்த சுருட்டையன் மகன் சுப்பிரமணி (46) என்பது தெரியவந்தது. இவர், கள்ளக்கு றிச்சியில் கல்வராயன் மலையையொட்டிய கரடுகளில் சந்தனக்கட்டைகளை வெட்டி எடுத்து சேலத்தில் உள்ள ஒருவரிடம் விற்க பேருந்தில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சுப்பிரமணியை கைது செய்து, 7கிலோ சந்தனகட்டைகளையும் பறிமுதல் செய்தனர். அவர் யாரிடம் விற்க வந்தார் என்ற விவரத்தை சேகரித்தனர். பின்னர், சேலம் மாவட்ட வன அலுவலர் காஸ்யப்ஷாங்ரவி முன்னிலையில் கைதான சுப்பிரமணியை வனத்துறையினர் ஆஜர்படுத்தினர். அவர், சந்தனக்கட்டைகளை கடத்திய குற்றத்திற்காக ₹1.30 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.