திரையரங்குகள் மூடல் … பாப்கார்னுக்கு ₹2000 கோடி..!

ஒரு காலத்தில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்த தனித்திரையரங்கங்கள் இன்று இருந்த இடம் தெரியாத அளவிற்கு ஆள் அரவமின்றி காணப்படுகின்றன. வருமானம் இழந்து, பராமரிப்புகளும் இன்றி கையை சுட்டுக் கொள்ளும் நிலையில் அதன் உரிமையாளர்கள் உள்ளனர். பலர் திரையரங்கத்தை ரியல் எஸ்டேட்டிற்கு தாரை வார்த்துள்ளதால் அவை இன்று அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறி வருகின்றன. அன்று பிரபலமாக இருந்த தனித்திரை திரையரங்குகள் பலவும் இன்று அடுக்குமாடி மற்றும் வர்த்தக வளாகங்களாகத்தான் காட்சியளிக்கின்றன. இன்றும் எங்கோ ஒரு மூலையில் தனி திரை கொண்ட திரையரங்குகள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. அதுவும் என்றைக்கு மூடப்படும் என்ற நிலைதான் . ஏன் இந்த நிலை ?இதற்கு விடிவு உண்டா!

தங்களின் விருப்பமான ஆக்ஷன் ஹீரோ திரையில் வரும் போது ஆட்டமாடி குஷியாக திரைப்படங்களை பார்த்தது அந்தக் காலம். எல்லாம் தொலைக்காட்சிகள் வரும் வரை தான். உலகெங்கும் வெளியாகும் படங்களை தொலைக்காட்சி வழியே பார்க்க முடிந்ததால் திரையரங்கிற்கு வரும் மக்கள் கூட்டம் குறைய தொடங்கியது. இதன் பின்னர் வீடியோ கேசட், சிடி, டிவிடி என பல ரூபங்களில் திரையரங்குகளுக்கு எதிரான வில்லன்கள் பலர் வந்ததால் கொஞ்சம் கொஞ்சமாக தனது தனித்தன்மையை இழந்து வந்தன திரையரங்குகள் .

இது ஒரு புறம் எனில் கேபிள் டிவி, இணையத்தில் புதிய படம் வெளியிடுதல், ஓடிடியில் படங்களை பார்த்தல் என மற்றொரு புறத்தில்ம் திரையரங்குகளுக்கு இடி. இதனால் பெரிய பெரிய நகரங்களிலேயே தனித் திரை கொண்ட திரையரங்குகள் இரண்டு அல்லது மூன்று மட்டுமே தற்போது செயல்பட்டு வருகின்றன.

இந்த நேரத்தில் திரை வர்த்தகத்தில் கால் பதித்த கார்ப்பரேட்டுகள் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை தொடங்கினர். அதாவது ஒரே இடத்தில் பல திரைகள் மற்றும் ஷாப்பிங் அனுபவங்களை அள்ளித்தந்து அதற்கேற்றார் போல் கட்டணங்களை உயர்த்தி விடுவது தான் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் . காசு அதிகம் என்றாலும் புதிய அனுபவம் இருந்ததால் பெருமளவில் மக்கள் இந்த திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனாலும் தனித்திரை திரையரங்குகள் வருமானத்தை இழந்து வருகின்றன.

புதிய திரைப்படங்களை பெரிய திரையில் பார்ப்பதுதான் மகிழ்ச்சி என்று சொல்லும் மக்கள் இன்றளவும் இருக்கிறார்கள். அவர்களை குறி வைத்து மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் பல தொடங்கப்பட்டு வருகின்றன. ஆண்டிற்கு புதிதாக 200 மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் உருவானால் அதற்கு பதிலாக 150 ஒற்றை திரை கொண்ட திரையரங்குகள் மூடப்படுவதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிய வந்துள்ளது. பராமரிப்பின்மை, உணவு மற்றும் பானங்களை வாங்குவதற்கு சரியான சூழல் இல்லை மற்றும் திரையரங்கை தவிர சுற்றி பார்க்க அங்கு எதுவும் இல்லை. இதனாலேயே இவை மக்களின் மதிப்பை இழந்து வருகின்றன.

மக்களின் விருப்பத்தேர்வு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி இவைகளே திரையரங்கு வர்த்தகத்தை தலைகீழாக புரட்டி போட்டுள்ளது. ஒரு காலத்தில் விசில் சத்தத்தால் நிரம்பி வழிந்த தியேட்டர்களின் வர்த்தகம் என்று மல்டிபிளக்ஸ் துறையில் சிறந்து விளங்கும் சில நிறுவனங்களின் கைகளில் மட்டுமே இருக்கிறது என்பதுதான் வேதனை. இதற்கு உதாரணமாக பிவிஆர் நிறுவனத்தில் கடந்த ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் உள்ள 1748 திரைகளில் டிக்கெட் வருவாய் 3279 கோடியாக உயர்ந்துள்ளது. அதேசமயம் பாப்கார்ன் உள்ளிட்ட நொறுக்குத் தீனி விற்பனைகளில் மட்டும் சுமார் 2000 கோடி வருவாயை ஈட்டி உள்ளது.

மக்களின் மனதை கவர்கின்ற வகையில் மாற்றங்களை செய்ததால் தான் இந்த சந்தையில் பலமாக காலூன்றியுள்ளது. இந்த வர்த்தகத் திறமை தனித்திரை கொண்ட திரையரங்கு உரிமையாளர்களிடம் இல்லை . இன்னும் சில ஆண்டுகளில் தனித்திரை கொண்ட திரையரங்கங்கள் இருக்காது என்பது மட்டுமே நிதர்சனம். டென்ட் தொட்டாய் தனி திரையரங்காய் மாறி இப்போது மல்டிபிளக்சாக மாறியுள்ளதுதான் கால மாற்றம். இதன் அடுத்த வளர்ச்சி என்னவாக இருக்கும் என்பதை யூகிக்க முடியாது. ஆனால் மல்டிபிளக்சுக்கும் வில்லன் என்று ஒருவன் நிச்சயம் உண்டு என்பது மட்டும் உண்மை.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்