தமிழுக்கு ஏன் பின்னடைவு?

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. சுமார் 92 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் பாடவாரியாக தேர்ச்சி விகிதம் என்று பார்க்கும் போது தமிழில் வெறும் எட்டு பேர் மட்டும்தான் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். கணிதம் உள்ளிட்ட மற்ற பாடங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு . தாய் மொழியில் பின் தங்கினாலும் முன்னேறி விட முடியும் என்ற மனப்பாங்கு இன்றைய மாணவர்களிடையே ஏற்பட்டுள்ளதற்கு யார் காரணம்? தமிழ் மொழியை அழிவு பாதைக்கு இட்டுச் செல்கிறதா இன்றைய கல்விமுறை? என்னென்ன மாற்றங்கள் தேவை? விரிவாக பார்க்கலாம்.

திண்டுக்கல் மாவட்டம் கொசவப்பட்டியை சேர்ந்த காவியா ஸ்ரியா என்ற மாணவி , கமுதியைச் சேர்ந்த மாணவி காவியஜனனி, நெல்லை மாணவி சஞ்சனா அனுஷ் ஆகியோர் பத்தாம் வகுப்பு தேர்வில் 499 மதிப்பெண்களை பெற்றுள்ளனர் . இவர்கள் ஒரு மதிப்பெண்ணை இழந்தது தாய் மொழியான தமிழில் தான். இவர்கள் மட்டுமல்ல இன்று இருக்கும் பல பிள்ளைகளுக்கு எந்தெந்த இடங்களில் தமிழை எப்படி எழுத வேண்டும் என்பது கூட தெரியவில்லை. அதற்கான சரியான கற்பித்தல் அவர்களுக்கு இல்லை. கற்பித்தல் இருந்தாலும் அதில் மாணவர்களுக்கு பெரிதும் ஆர்வமில்லை. ஒற்றெழுத்து வரும் இடங்கள் , லகர ளகர வித்தியாசம் , ர ற வித்தியாசம் ந ன ண வித்தியாசம் இப்படி பல கற்றல் குறைபாடுகள் மாணவர்களிடத்தில் உள்ளது.

இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தமிழில் படிப்பது கட்டாயம் என்று சொன்னால் மட்டும் போதாது. அவர்கள் அதை படிக்க ஆர்வம் வரும் வகையில் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

நடப்பு கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பில் தமிழ் கட்டாய பாடமாக கற்பிக்கப்பட வேண்டும் என்ற விதி ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளது(கடந்த கல்வி ஆண்டு வரை தமிழ் கட்டாய பாடம் ஒன்பதாம் வகுப்பு வரை என்று இருந்தது) இதற்கென தகுதி வாய்ந்த ஆசிரியர்களை பணியமர்த்தி மாணவர்களுக்கு தமிழ் பாடத்தை கட்டாயம் கற்றுத் தர வேண்டும் என பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் இந்த உத்தரவு தள்ளிப் போடப்பட்டுள்ளது. மொழி சிறுபான்மையினர் பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படாததால் நடப்பாண்டில் இந்த விதி அமல்படுத்தப்படாது என்றும் மாறாக அடுத்த கல்வியாண்டில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு கட்டாய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது .

2006 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் ஒரு வகுப்புக்கு தமிழ் பாடம் நீட்டிக்கப்பட்டு இந்த ஆண்டு பத்தாம் வகுப்புக்கு தமிழ் கட்டாயம் என்பது அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது இப்போது இல்லை. ஒவ்வொரு ஆண்டும் ஒரு வகுப்புக்கு தமிழ் பாடம் நீட்டிக்கப்படும்போது அந்த வகுப்பில் தமிழ் கற்பிக்கப்பட்டதற்கான சான்றிதழை பள்ளிகளின் நிர்வாகங்கள் அரசிடம் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி முந்தைய 9 ஆண்டுகள் தங்களது பள்ளி மாணவர்களுக்கு தமிழ் பாடத்தை சொல்லி கொடுத்ததாக அரசிடம் சான்றிதழ் வழங்கிய அந்த பள்ளிகள் இந்த ஆண்டில் மட்டும் சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பிள்ளைகளுக்கு தமிழ் பாடத்தை கற்பிக்க முடியவில்லை என விலக்கு கோரியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் எப்படி இந்த கட்டமைப்பு மறைந்து போனது?

அரசு எழுப்ப வேண்டிய இந்த கேள்வியை தமிழ் ஆர்வலர்கள் கேட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் தான் தாய் வழியில் படிக்காமல் பட்டப்படிப்பை கூட நிறைவு செய்ய முடியும் என்ற நிலை இருக்கிறது . தமிழை கட்டாய பாடமாக்குவதில் அரசு காட்டும் ஆர்வம் குறைந்துள்ளதா என்ற கேள்வியும் இங்கு எழாமல் இல்லை .

தமிழ் கட்டாயம் என்ற சட்டம் இயற்றப்பட்டு 18 ஆண்டுகள் ஆகியும் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை . இதற்கு உடனடியாக முடிவு எட்டப்பட வேண்டும் . இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து அடுத்த ஆண்டாவது தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பாடத்திட்டம் நன்றாக இருந்தாலும் அதை மாணவர்களிடம் சேர்ப்பதில் பல முரண்கள் உள்ளன. தமிழிலும் தமிழ் இலக்கணத்திலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த 50 ஆண்டுகளுக்கு முந்தைய ஆசிரியர்களை போல் இன்றைய ஆசிரியர்கள் இல்லை.

இலக்கணத்தை மாணவர்கள் நன்கு விரும்பும் வகையில் எளிமைப்படுத்திக் கொண்டு சேர்க்கும் பணி தமிழாசிரியர்களுக்கு அடிப்படை . ஆனால் நடப்பது என்ன ?

தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் தமிழில் பட்டம் பெறாதவர்களே தமிழ் பாடம் கற்பிக்கிறார்கள். அவர்களால் எப்படி சிறப்பாக தமிழை சரியாக சொல்லித் தந்து விட முடியும்? பண நோக்கம் கொண்ட சில தனியார் பள்ளிகளில் குறைவான சம்பளத்திற்கு யார் வருகிறார்களோ அவர்கள் தமிழ் பாடம் எடுக்கலாம் என்ற நிலை தான் இன்று பெரும்பாலும் இருக்கிறது . மற்ற பாடங்களுக்கு கூடுதலாக பாட வேளைகள் ஒதுக்கப்பட்ட பிறகு மீதம் இருக்கும் நேரத்தில் தேர்ச்சி பெறும் நோக்கில் தமிழ் பாடம் நடத்துகிற பள்ளிகளும் இன்று உள்ளது .

இப்படி இருந்தால் மாணவர்களுக்கு எப்படி தமிழ் மீதான ஆர்வம் வளரும்? பள்ளிகள் முதலில் தகுதியான ஆசிரியர்களை நியமித்து மாணவர்கள் தமிழிலும் அதிக மதிப்பெண்கள் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். அரசும் தமிழ் மொழியில் முழு மதிப்பெண் பெறுபவர்களுக்கு ஊக்கத் தொகை அறிவிக்க வேண்டும். மேலும் அவர்கள் விரும்பும் மேல் படிப்பிற்கான செலவினையும் முற்றிலுமாக நீக்க வேண்டும்.

எல்லா பள்ளிகளிலும் தமிழ் பாடம் நடத்த தகுதியான தமிழாசிரியர்கள் எவ்வளவு பேர் பணியாற்றுகிறார்கள் என்பதை கணக்கெடுக்க வேண்டும் பிற மொழி ஆசிரியர்களுக்கு இணையாக அவர்களுக்கும் ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதை அறிய வேண்டியது அவசியம்.

இன்றைய தமிழாசிரியர்களை பார்த்து மாணவர்களே பரிதாபப்படுகிற நிலைதான் உள்ளது. இத்தகைய சூழலில் தமிழ் ஏற்றம் பெறுமா என்பது கானல்நீர் போலத்தான்

தமிழ் வளர்ச்சி என்று சொல்லிக் கொள்ளும் நமது அரசும், அரசியல் கட்சிகளும் மாணவர்களை பற்றி கவலைப்படுவதுடன், ஆசிரியர்களையும் மனதில் வைத்து ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். அப்போதுதான் தமிழில் ஆர்வத்துடன் படிக்கும் பிள்ளைகளும் உருவாகுதுடன் மற்ற பாடங்களுக்கு இணையாக தமிழிலும் அதிக மதிப்பெண்களை பெற முடியும் .

தமிழை மட்டுமே படிக்க வேண்டும் என்று சொல்வது எங்கள் நோக்கமல்ல. உலகின் மூத்த மொழி என்று கருதப்படும் தமிழ் மொழி வளரும் தலைமுறையோடு மறைந்து விடக்கூடாது என்பதே எங்கள் நோக்கம் .

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்