காவிரி மேலாண்மை ஆணையத்தின் 33 வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. பருவ மழை காலத்தில் பெய்த கன மழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் உச்ச நீதிமன்ற உத்தரவை காட்டிலும் அதிக அளவில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக கர்நாடக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சுமார் 90 டிஎம்சி அளவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டதாகவும் கர்நாடக அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவித்தனர்.
கர்நாடக அணைகளில் தற்போது 110 டிஎம்சி தண்ணீர் இருப்பதாகவும், உபரி நீரை மட்டுமே கர்நாடகம் திறந்து விட்டுள்ள நிலையில் அதனை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் தமிழகத்தின் சார்பில் வாதிடப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின் படி அடுத்த மாதம் 36.7 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறக்க உத்தரவிடும்படியும் கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
நிறைவாக பேசிய ஆணையத்தின் தலைவர் எஸ் கே ஹல்தர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை கண்காணிப்பது குறித்து இரு மாநில அதிகாரிகளுக்கும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்றார்.
இம்மாத இறுதி வாரத்தில் நடைபெறும் காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டத்தில் வழங்கப்படும் பரிந்துரைகள் குறித்து அடுத்த ஆணைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் எஸ் கே ஹல்தர் தெரிவித்தார்.