ஜவ்வரிசியிலும் கலப்படம் உண்டு தெரியுமா? கலப்பட ஜவ்வரிசிகளை பயன்படுத்தும் போது கவனம் தேவை…
அரிசி, கோதுமையைப் போல நிலத்தில் விளையும் தானியம் அல்ல ஜவ்வரிசி. மரவள்ளிக்கிழங்கு வேர்களில் இருந்து நசுக்கப்பட்ட ஈரமான ஸ்டார்ச் தூளில் இருந்து சாகோ எனப்படும் ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது. ஜாவா தீவிலிருந்து முதன் முதலாக வந்த இதனை அரிசி போல் இருந்ததால் ஜாவா அரிசி என்றும் நாளடைவில் ஜவ்வரிசி என்றும் பெயர் மாறியது. சாகோ, சகுடானா, சாபுதானா, சௌவாரி என வெவ்வேறு பெயர்கள் இதற்கு உண்டு.
அதிக அளவு கார்போஹைட்ரேட்டும் குறைந்த அளவு கொழுப்பு சத்தும் இதில் உண்டு.
தமிழர்களை விட மகாராஷ்டிரர்கள் அதிக அளவில் ஜவ்வரிசிகளை பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் 700க்கும் மேற்பட்ட ஆலைகளில் ஜவ்வரிசி தயாரிக்கப்பட்டாலும், 90% சேலம் மற்றும் நாமக்கல் வட்டாரங்களில் உள்ள ஆலைகளிலேயே தயாரிக்கப்படுகிறது.
தற்போது வட மாநிலங்களில் பண்டிகை காலம் என்பதால் இங்கிருந்து ஜவ்வரிசி ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதனை பயன்படுத்தி போலி ஜவ்வரிசி தயாரித்து விற்பனைக்கு அனுப்புவதும் நடந்து வருகிறது.
ஜவ்வரிசியின் பழுப்பு நிறத்தை வெண்மையாக மாற்ற அதில் வாஷிங் பவுடரையும், செயற்கை ரசாயனங்களையும் கலந்து விடுகிறார்கள். இதனை சாப்பிடும் போது வாந்தி , பேதி போன்ற உடல் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே வெண்மையை கண்டு ஏமாறாமல் வெண்மை குறைந்த ஜவ்வரிசிகளையும், அதனையும் நம்பிக்கையான கடைகளிலும் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும்.