உலகில் வாழும் மக்கள் தமக்குத் தேவையான, தாம் விரும்பும் எதையும், பெற்றுக் கொள்ள, நிறைவேற்றிக் கொள்ள தமது தாய் மொழியை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
கருத்துக்களைக் கூறவும், உணர்ச்சிகளை வெளியிடவும், மொழி உதவுகின்றது.
எனவே மொழியை பயன்படுத்தும் பொழுது பிறர் அதனைக் கேட்டு மனம் மகிழும் வண்ணம் பயன்படுத்த வேண்டும்.
மொழியை தவறாக பயன்படுத்தினால் தமக்கு துன்பமே விளையும்.
பேசுகின்ற ஒரு சொல் கேட்பவரை மகிழ்விக்கும். வேறொரு சொல் கேட்பவருக்கு சோகத்தை உண்டாக்கும்.
ஒரு சொல் வெல்லும்; பிரிதொரு சொல் *கொல்லும் .
ஒரு சொல் சினத்தை தூண்டும். இன்னொரு சொல் ஆறுதல் தரும்.
ஒரு சொல் இன்பம் தரும். மற்றொரு சொல் துன்பம் தரும்.
எனவே, ஒன்றை பேசுவதற்கு முன் சிந்தித்து, சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேச வேண்டும். ஒருவர் பேசும் தவறான சொற்களால் அவர் பிறருக்கு துன்பத்தை ஏற்படுத்துவதோடு தாமும் வருந்துவர்.
இந்தக் கருத்தை,
வான் புகழ் கொண்ட திருவள்ளுவர் பெருந்தகை ஒரு குரலில் தெளிவாக கூறியுள்ளார்.
“யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகப்பர் சொல்லிழுக்குப் பட்டு”
மெய், வாய், கண், காது, மூக்கு ஆகிய ஐந்தையும் தவறான நெறியில் செல்லாமல், அடக்கி காக்க வேண்டும்.
இவற்றுள் எதனைக் காக்க தவறினாலும், நம்முடைய நாக்கை காக்க வேண்டும். அதாவது தவறான சொல்லை பேசாது காத்துக்கொள்க..
அவ்வாறு காக்காவிடில், நாம் பேசும் பேச்சில்
சொற் குற்றம் ஏற்பட்டு, துன்பப்படுவர் என்பதே இந்தக்குறளின் விளக்கம்