சேலம் மேற்கு தொகுதியின் அவல நிலை – எழுச்சி பெறுமா…?

2011 தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் சேலம் 1, சேலம் 2, பனைமரத்துப்பட்டி தொகுதிகள் நீக்கப்பட்டு சேலம் தெற்கு, வடக்கு, மற்றும் சேலம் மேற்கு தொகுதிகள் உருவாக்கப்பட்டன.

ஓமலூர் , சேலம் வட்ட பகுதிகள் சேர்க்கப்பட்டு சேலம் மேற்கு தொகுதி உருவாக்கப்பட்டது. விவசாயம் முக்கிய தொழிலாக இருந்தாலும் கயிறு திரிக்கும் தொழில், விசைத்தறி, கைத்தறி, வெள்ளித்தொழில் பெரும்பாலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

இது தவிர கூலித் தொழிலாளர்களையும் பெருமளவில் உள்ளடக்கியது சேலம் மேற்கு தொகுதி. தமிழகத்தின் முதல் ஈரடுக்கு மேம்பாலம், 5 சாலை முதல் ராமகிருஷ்ணா சாலை வரையிலான மேம்பாலம் , திருவாக்க கவுண்டனூர் ரவுண்டானா மற்றும் கந்தம்பட்டி பகுதிகளில் உள்ள மேம்பாலம் இது தவிர புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம் என முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி.

பிரம்மாண்டமாக தெரிந்தாலும் இன்னும் பல இடங்களில் அடிப்படை வசதிகளுக்கு கூட வழி இன்றி தவித்து வருகின்றனர் தொகுதி மக்கள் .

குறிப்பாக செல்லப்பிள்ளை குட்டையில் வசித்து வரும் 600க்கும் மேற்பட்ட மக்களுக்கு இன்னமும் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. கழிவுநீருக்கு மத்தியிலேயே அனைத்து காலங்களையும் அவர்கள் கடந்து வருகின்றனர் . அரசும் மாவட்ட நிர்வாகமும் தங்களுக்கு உதவவில்லை என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

சேலம் உருக்காலையில் காலியாக உள்ள நிலத்தில் சிறு குறு தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. சேலம் தகவல் தொழில்நுட்ப பூங்காவினை முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டுவந்து இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு உருவாக்கி தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

கயிறு திரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்கள் தங்களுக்கென ஒரு கூட்டுறவு சங்கம் ஏற்படுத்தி அதன் மூலம் வங்கிக் கடன் பெற்று தொழிலை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

மாங்குப்பை காமராஜர் காலனியிலும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை. முறையான சாலை வசதிகள் இல்லாததால் வாகனங்கள் வந்து செல்ல மிகவும் கடினமான சூழல் நிலவுகிறது.

ஆரம்ப சுகாதார நிலையத்தையாவது தங்களது பகுதியில் அமைத்திட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

மாநிலத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக சேலம் ரயில் நிலையம் கடுமையான வாகன நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. இதற்கு தீர்வு காண வேண்டும். பல இடங்களில் குடிநீர் பிரச்சனை தலை விரித்தாடுகிறது.

இதற்கான தீர்வுகளும் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட பிரச்சனைகள் இருக்க, ஜாகீர் அம்மா பாளையத்திலோ பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கவும் மறுக்கப்பட்டு வருகிறது.

அடிப்படை தேவைகள் நிறைவேறாத வரை எந்த ஒரு வளர்ச்சியும் முன்னேற்றமாக அத்தொகுதி மக்களால் கருதப்படாது என்பதுதான் நிதர்சனம்

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்