கல்வராயன் மலைப்பகுதி சுற்றுலா பகுதியாக தரம் உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்று. கள்ளச்சாராய மலை என்று அழைத்து கல்வராயன் மலையின் புகழ் பறிபோன நிலையில் அதனை மாற்றி மக்கள் பயணிக்கின்ற, பயன்படுத்துகின்ற சுற்றுலா தலமாக மாற்றுவதால் கள்ளச்சாராய புழக்கம் வெகுவாக குறையும்.
ஆனால் இம்மலையின் தொழில் வளத்தை பெருக்க ஏற்கனவே திறக்கப்பட்ட தொழிற்சாலை பராமரிப்பின்றி மூடி கிடக்கிறது. அதை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் மலைவாழ் மக்களின் பொருளாதாரம் மேம்படும். கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் குறையும்.
சேலம் உள்ளிட்ட நான்கு மாவட்ட எல்லைகளை பகிர்ந்துள்ள கல்வராயன் மலைப்பகுதியில் 250 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ளவர்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்பு. இது தவிர வனப்பகுதியுடன் தொடர்புடைய விறகு வெட்டுதல், தேன் எடுத்தல் ,கடுக்காய் சேகரித்தல் போன்றவையும் அடங்கும்.
மருத்துவத்திற்கு பயன்படும் கடுக்காய் மரங்கள் மலை கிராமங்களிலும், காடுகளிலும் அதிக அளவில் உள்ளன . சித்த மருத்துவம், பற்பொடி, பற்பசை தயாரித்தலுக்கு பயன்படுத்தப்படும் கடுக்காய் இயற்கை முறையில் தோல் பதனிடுவதிலும் முக்கிய பொருளாக உள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை ஐந்து மாதங்கள் இதன் விளை பருவம் ஆகும் .
மலையில் கடுக்காய் சேகரிக்கும் மக்கள் இடைத்தரகர்களிடம் விற்பனை செய்து வந்ததில் ஓரளவிற்கு வருவாய் கிடைத்தது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள தோல் தொழிற்சாலைகளுக்கு அவை ஏற்றுமதியானது. மேலும் கள்ளச்சாராயத்தின் மூலப்பொருளாக கடுக்காய் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கடுக்காயினை குறைந்த விலைக்கு பெற்று அதிக விலைக்கு விற்பனை செய்வதை தவிர்க்கும் வகையில் 2017 ஆம் ஆண்டு வனத்துறை சார்பில் கரியாலூர் படகுத்துறை அருகே கடுக்காய் தொழிற்சாலை அமைக்கப்பட்டது அதிகாரிகளின் அலட்சியத்தால் அது தொடர்ந்து செயல்படாமல் கைவிடப்பட்டது.
இதனால் பல லட்ச ரூபாய் செலவில் உருவான கடுக்காய் தொழிற்சாலை பயன்பாடு இன்றி பூட்டி கிடக்கிறது. தற்போது கடுக்காய் விளை பருவம் தொடங்க உள்ள நிலையில் அதன் ஏற்றுமதி அதிகரித்தால் அது கள்ளச்சாராய உற்பத்தியை நிச்சயம் பாதிக்கும்.
இயற்கை வளம் அதிகம் கொண்ட கல்வராயன் மலையில் அங்கு வசிக்கும் மக்களின் ஏழ்மை நிலையை பயன்படுத்தி, பணத்தாசை காட்டி அவர்களை கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றனர் சாராய வியாபாரிகள் . ஒரு சிலர் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செம்மரம் வெட்டும் தொழிலுக்கும் ரகசியமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இறுதிவரை உடல் உழைப்பை அளிக்கும் இவர்கள் நாளடைவில் குற்றவாளியாகவும் சமூகவிரோதியாகவும் தள்ளப்படுகின்றனர். எனவே கல்வராயன் மலையை சுற்றுலாத்தலமாக மாற்றும் முன்பு அங்கு கட்டப்பட்டுள்ள கடுக்காய் தொழிற்சாலையை கொண்டு வந்து மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை அரசு மேம்படுத்த வேண்டும்.
கள்ளச்சாராயம் காய்ச்சுவதையும் விற்பனை செய்வதையும் உறுதிபட தடுக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தை இந்த அரசு உண்மையாக கொண்டிருந்தால் இந்த மலையில் நிச்சயம் தொழில் வளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும். இதனால் மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும்