சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம் , வேலை வாய்ப்பு ஆகியவற்றில் சம உரிமை மற்றும் வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திட்டங்களை தீட்டி, சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்.
1865 ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரசால் நாட்டின் வடமேற்கு எல்லை புற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பே இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பாக கருதப்படுகிறது. 1931 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ஆங்கிலேயர் காலத்திய கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பாகும். அதன் பிறகு நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளில் சாதிகள் விபரம் சேர்க்கப்படவில்லை. ஆனால் பட்டியல் பிரிவில் இருக்கும் பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதால் அவர்களது எண்ணிக்கை மட்டும் சேகரிக்கப்பட்டது. மற்ற சாதியினரின் எண்ணிக்கையை பொறுத்தவரை 1931 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இருந்த விபரமே இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் அவை வெளியிடப்படவில்லை. அதன் பின்னர் வந்த பிஜேபி அரசும் அந்த கணக்கெடுப்பு பல குறைபாடுகளை கொண்டிருப்பதால் நம்பகத் தன்மையற்றது என்றும் இட ஒதுக்கீடு மற்றும் கொள்கையின் நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியாது என்றும் கூறியது . 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கோவிட் காரணமாக நடைபெறவில்லை.
இந்நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பும், சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்திட வேண்டும் என பல்வேறு மாநில அரசுகளும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இட ஒதுக்கீடு அளிக்கவும் சமூக பொருளாதார பின்னணி தெரிந்தால் மட்டுமே அரசின் சலுகைகள் முறையாக பயனாளிகளை சென்றடைய முடியும் என்பதாலும் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். பல்வேறு சாதியினர் தங்கள் எண்ணிக்கையை சார்ந்து பல கோரிக்கைகளை முன் வைக்கிறார்கள் . அவை சரிதானா என்பதும் கணக்கெடுப்பின் மூலம் தெரியவரும்.
இந்தியாவில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்கள் நீண்ட காலமாக இட ஒதுக்கீட்டை பின்பற்றி வருகின்றன. ஆனால் இந்த நடைமுறையில் நீதிமன்றங்கள் பல முறை குறுக்கிட்டுள்ளன.
இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தால் போதிய புள்ளி விபரங்கள் இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றம் அதை ரத்து செய்கிறது. இதனாலேயே சாதிவாரி கணக்கெடுப்பினை மத்திய அரசே நடத்த வேண்டும் என்று மாநில அரசுகள் வலியுறுத்துகின்றன.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது தேசிய முதலமைச்சர், 2008ன் படி சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளும் மாநில அரசுகள் மக்களின் சமூக பொருளாதார புள்ளி விவரங்களை சேகரிக்க மட்டுமே வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதன் உட்பிரிவு ஆ -வின்படி இந்திய அரசமைப்பு சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் உள்ள இனங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை மாநில அரசால் சேகரிக்க இயலாது. பிரிவு 32 இன் படி மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948 கீழ் மக்கள் தொகை தொடர்பான புள்ளி விவரங்களை மாநில அரசால் சேகரிக்க இயலாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மேற்கொண்டு கிடைக்கப்பெறும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் மாநில அரசுகள் மேற்கொள்ளும் பணிகளுக்கு தான் சட்டப்படியான பாதுகாப்புகள் இருக்கும். மாநில அரசுகள் மேற்கொள்ளும் கணிப்புகளின் மூலம் சட்டங்கள் இயற்றினால் அவை நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பீகாரில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி இட ஒதுக்கீடு சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அம் மாநில உயர்நீதிமன்றம் அதனை ரத்து செய்தது.
2021 ஆம் ஆண்டு மகாராஷ்டிர அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் பிற்படுத்தப்பட்ட மக்கள் பற்றிய தரவுகளை கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்க உத்தரவிடக்கோரி கேட்டுக் கொண்டிருந்தது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பை நடத்துவது நிர்வாக ரீதியாக கடினமானது மற்றும் சிக்கலானது என்று தெரிவித்திருந்தது. மத்திய பட்டியலில் 2479 பிற்படுத்தப்பட்ட சாதிகள் உள்ளதாகவும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியலின்படி 3150 சாதிகள் உள்ளதாகவும் கூறியுள்ளது மத்திய அரசு. மேலும் சாதிப் பிரிவுகளில் பல உட்பிரிவுகள் இருப்பதால் மாறுபட்ட தகவல்கள் வரக்கூடும் என்றும் அதில் சிக்கல்கள் ஏற்படும் என்று அந்த மனுவிற்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். இதனை மாநில அரசுகளின் உதவியுடன் மத்திய அரசு விரைந்து நடத்தினால் நாட்டின் நிலவும் சாதி தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கும், பிரச்சனைகளுக்கும் விடை கிடைக்கும். இட ஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் சலுகைகள் அனைத்தும் உரியவர்களை போய் சென்றடையும் .