காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட முடிவு எடுக்க தமிழகத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது
தமிழகத்திற்கு இந்த மாதம் தினமும் ஒரு டிஎம்சி தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடகத்திற்கு காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கர்நாடகம் நேற்று முன்தினம் கூட்டியது. இதில் நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி எனப்படும் வினாடிக்கு 11 ஆயிரத்து 500 கன அடி தண்ணீருக்கு பதிலாக, 8000 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விட முடிவெடுக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் உத்தரவை நிறைவேற்ற மறுக்கும் கர்நாடகத்திற்கு தமிழக முதலமைச்சர் உட்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர் . இந்த நிலையில் தமிழக அரசு இன்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட முடிவு எடுக்க உள்ளது.
இதனிடையே கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரால் தமிழக எல்லையான பிலிகுண்டுவிற்கு வரும் நீரின் அளவு 13,000 கன அடியாக உள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர் வரத்தும் கணிசமாக அதிகரித்துள்ளது.
காவிரியின் குறுக்கே கர்நாடகம் கட்டியுள்ள நான்கு அணைகளில் நீர் இருப்பு 77 டிஎம்சி ஆகவும், மொத்த கொள்ளளவில் 68 சதவீதமாகவும் உள்ளது. மேலும் வினாடிக்கு 36,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணைகளுக்கு தினமும் 3.15 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் நிலையில் காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவின் படி நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடக மறுத்து வருவது தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.