தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
அண்மையில் தென் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் கொண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன் இந்த காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த மூன்று காவலர்கள் பறிமுதல் செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்த விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் வந்து பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசியதாக பழைய எடப்பாடி பகுதியைச் சேர்ந்த 20 வயதான ஆதித்யா என்பவரை கைது செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.