எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர், பொதுத் தொண்டின் நாயகர், பேச்சு , எழுத்து, ஆளுமை, கலைத்துறை, இலக்கியத் துறை, அரசியல் துறையில் அரியதோர் வரலாற்றுச் சாதனையாளர் தமிழ் திரைப்பட கதாசிரியர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு இன்று ஆறாவது ஆண்டு நினைவு நாள்.
தமிழ் சினிமாவில் புராணங்கள், இலக்கியங்கள் என பழகிப்போன கதைகளையே மீண்டும் மீண்டும் படமாக எடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், பல்வேறு சமூக கருத்துகள் கொண்ட படங்களை வழங்கி, சினிமா மூலம் சமூகத்தில் மாற்றத்தைக் கொடுக்க முடியும் என நிரூபித்துக் காட்டியவர் கலைஞர் மு.கருணாநிதி.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சினிமா என்பது, ஒரு கலையாக மட்டுமின்றி, அது மக்களின் ஒரு உணர்வாகப் பார்க்கப்பட்டு வருகிறது. திரையில் தோன்றும் நாயகர்களை நிஜத்திலும் ஹீரோக்களாக பார்க்கும் பழக்கம் இன்றுவரை தமிழ்நாட்டில் நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், சினிமா பிரபலங்களை வைத்து அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடிய காலத்தில், அந்த சினிமாவின் உண்மையான சக்தியைக் கண்டறிந்து அதனை முழுமையாக பயன்படுத்தியவர் என்றால் அது கருணாநிதி தான்.
சிறுவயது முதலே தமிழ் மொழியின் மீது அதிகம் பற்று கொண்டிருந்த கருணாநிதி, நாவல்கள் மற்றும் எண்ணற்ற கவிதைகளை எழுதி, தனது எழுத்துத் திறமையை மெருகேற்றி வந்தார். அதனை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுசெல்லும் விதமாக, நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்கும் திரைக்கதைகளை எழுதினார் கலைஞர்.
தமிழகத்தில் திராவிட கொள்கைகள் இன்றளவும் வேரூன்ற முக்கியமான காரணம் கருணாநிதி தான். அவர் திரைக்கதை எழுதிய பெரும்பாலான படங்களில் திராவிடக் கொள்கைகளை விதைத்து அதனை மக்கள் மனதில் புகுத்தினார்.
அவர் முதன்முதலில் சினிமாவில் திரைக்கதை எழுதிய படம் ராஜகுமாரி, எம்ஜிஆர் நடிப்பில் 1947 ஆம் ஆண்டு வெளியான இப்படம் எம்ஜிஆருக்கும் கலைஞருக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. கலைஞர் தான் பணியாற்றிய பெரும்பாலான படங்களில் சமூக கருத்துகளைப் பதிவு செய்திருந்தாலும், தற்கால சமூக பிரச்சனைகள் மற்றும் மூட நம்பிக்கைகள் என அனைத்தையும் முன்னிறுத்தி அவரின் ‘பராசக்தி’ திரைப்படம் எடுக்கப்பட்டு இருந்தது.
சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான இப்படத்திற்காக கலைஞர் எழுதிய வசனங்கள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. தங்கரதம், பணம் போன்ற படங்களில் தீண்டாமை, விதவைகள், சுய மரியாதைத் திருமணங்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகளைப் பற்றி ஆழமாக பேசியிருந்தார் கலைஞர். பேச்சு வழக்கு தமிழ் மொழியை சினிமாவில் அறிமுகப்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர் கலைஞர்.
தற்போதைய காலகட்டத்தில் சமூக கருத்துகளைப் பற்றிய படங்களை எடுத்தால் அது சர்ச்சையில் சிக்குவதோடு, தடையும் செய்யப்படுகின்றன. ஆனால், அந்தக் காலத்திலேயே சமூகப் பிரச்சனைகள் அதிகம் பேசப்பட்டதால், கலைஞரின் நாடகங்களுக்கும், படங்களுக்கும் பல முறை தடைவிதிக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. அதற்கு ஒரு சிறந்த உதாரணம் பராசக்தி படம். மேலும், கடந்த 1950-ம் ஆண்டு கலைஞரின் இர ண்டு நாடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர் என சினிமாத் துறையில் தனது சீரிய எழுத்துகளால் கர்ஜனை செய்தவர் கலைஞர்.
தமக்கு வந்த சோதனைகளை எல்லாம் சாதனைகளாக்கி,அந்த சாதனைகளை மக்களின் உரிமைகளாக கொண்டு வந்து வெற்றி பெற்றவர்.அதன் மூலம் நம் தமிழ்நாட்டின் மட்டுமல்ல இந்திய நாட்டின் சரித்திரத்தியே மாற்றி காட்டிய பெருமைக்கு உரியவர்தான் கலைஞர் மு.கருணாநிதி
அவரின் 6ஆம் ஆண்டு நினைவு நாளில் அந்த மாபெரும் மனிதரை, தலைவரை நினைவு கூறுவோம்.