ஏரி மண் விற்பனை தொடர்கதையாகி வருகிறது – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
விவசாயிகளின் வசதிக்காக ஏரிகளில் வண்டல் மண் எடுத்து பயன்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி அந்தந்த தாலுக்கா அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து அனுமதி பெற்று டிராக்டர் மூலம் ஏரியில் ஒரு அடி ஆழத்திற்கு மட்டும் வண்டல் மண்ணை எடுத்து விவசாய நிலத்திற்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி சின்னப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அளவுக்கு மீறிய ஆழம் ஏற்படுத்தி டாரஸ் மற்றும் டிப்பர் லாரிகளில் அதிக அளவில் மண் திருடப்பட்டு வருகிறது. இதனை எந்த ஒரு அதிகாரியும் கண்டு கொள்ளவில்லை .
தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் குற்றம் சாட்டி வரும் இப்பகுதி மக்கள் , மண் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதித்து , வரும் காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று அச்சம் தெரிவிக்கின்றனர்.
தங்களது வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகள் மக்களுக்காக நேரில் வந்து ஆய்வு செய்து மண் கடத்தும் கும்பலின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.