பூர்வீகம் ஆந்திராவாக இருந்தாலும் தமிழ் திரைப்படங்களில் இவர் வந்தால் மற்ற எல்லா நடிகர்களையும் தூக்கி சாப்பிட்டு விடுவார். நாடகங்கள், திரைப்படங்களில் நடித்திருந்தாலும் செயற்கைத்தனம் ஏதும் இல்லாமல் இயல்பான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த குணச்சித்திர நடிகர் எஸ் வி ரங்காராவ் தான் அவர்.
அந்த காலத்திலேயே பட்டதாரியான ரங்காராவ், திரைப்படங்களில் பெரும்பாலும் பாசக்கார அப்பாவாகவே வந்திருப்பார். மகாபாரதம் போன்ற இதிகாச படங்களில் மட்டும் தான் வில்லன் கதாபாத்திரத்தில் வருவார் .காரணம் இவருடைய உயரமும் கம்பீரமும்.
இவர் படங்களை பார்க்கும் போது தெலுங்கு திரை உலகில் இருந்து வந்தவர் என்ற எண்ணமே யாருக்கும் வராது. ஆங்கில நாடகங்களில் நடித்த ஷேக்ஸ்பீரியன் நடிகர் என்ற பெயரும் அவருக்கு உண்டு.
மிஸ்ஸியம்மா, எங்க வீட்டுப் பிள்ளை, படிக்காத மேதை, நானும் ஒரு பெண், பக்த பிரகலாதா, அன்புச் சகோதரர்கள், பேசும் தெய்வம் எல்லாவற்றிற்கும் மேலாக எல்லோரையும் கவர்ந்த மாயா பஜார் போன்ற திரைப்படங்கள் ரங்காராவின் புகழ் பேசுபவை. ரங்காராவிற்கு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் மார்பளவு சிலை உள்ளது. தன் வாழ்நாளில் முதுமையை பார்த்தறியாத ஒருவர், திரைப்படங்களில் 25 வருடங்களாக அதிகம் வயதான, முதிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் என்பது ஆச்சரியம்தான் .
எழுபது வயது மனிதராக தமிழ் சினிமாவால் காட்சிப்படுத்தப்பட்ட ரங்காராவ் 1974ல் மறைந்த போது அவருக்கு வயது 56.