கிராமங்கள் வளர்ந்தால் தான் ஒரு நாடு வளரும் என்பது முன்னோர்களின் வார்த்தை. அதனால் தான் எந்த அரசு வந்தாலும் கிராமங்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அதிக அளவில் கொண்டு வருவது வழக்கம். ஆனால் இன்றும் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் வறட்சியின் பிடியில் சிக்கிய ஒரு தமிழக கிராமம் , ஆளில்லா கிராமமாக காட்சியளிக்கிறது . எங்கு இருக்கிறது இந்த கிராமம்?
நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 13 கிலோமீட்டர் தொலைவில் மேல் செக்காரக்குடிக்கு அடுத்துள்ள கிராமம் மீனாட்சிபுரம் . கடவுளின் பெயரை கொண்டிருந்தாலும் இந்த ஊரில் அடிப்படை வசதிகள் என்று ஏதும் இல்லை.
2011 இல் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 1269 பேர் இருந்தனர். கடுமையான வறட்சியின் காரணமாக தினமும் 5 கிலோமீட்டர் தூரம் கடந்து சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய சூழலில் அந்த ஊர் மக்கள் இருந்தனர். விவசாயமும் பொய்த்துப் போகவே வேறு வழி இன்றி பிழைப்புக்காக அவர்கள் ஊர் ஊராக செல்ல தொடங்கினர் .
கந்தசாமி என்ற முதியவர் மட்டும் அந்த ஊரில் தனி ஒருவராக வாழ்ந்து வந்தார் . ஊரைவிட்டு சென்றவர்கள் முண்டும் வர வேண்டும் என்பதே இவரது இறுதி வரையிலான ஆசை.
அது நிறைவேறாமலேயே உலகை விட்டு அவர் மறைந்தார். இதனால் மீனாட்சிபுரம் இப்போது ஆளில்லா கிராமமாக காட்சியளிக்கிறது.
ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்குறுதிகளை அள்ளி வீசுவோர் ஆட்சிக்கு வந்தபின் இந்த கிராமத்தை கண்டு கொள்ளவில்லை என்பது வருத்தமான நிகழ்வு. தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏறக்குறைய தற்சார்பினை அடைந்திருந்தாலும் இதுபோன்ற விஷயங்களில் அவை பொய்த்துப் போகின்றன.
ஊரை விட்டு சென்றவர்கள் திரும்ப வர வேண்டும் அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை அரசு உருவாக்கித் தர வேண்டும் அது மத்திய அரசோ அல்லது மாநில அரசோ எதுவாக இருந்தாலும் . மக்களை குடியமர்த்த வேண்டியது அவர்களின் கடமை. இல்லாமல் போனால் வரும் காலத்தில் பல மீனாட்சிபுரங்கள் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது.