ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை! விளைச்சல் குறைந்துள்ளதால் எகிறும் அரிசி விலை! விலை கேட்டு வாங்க தயங்கும் மக்கள் .
தமிழகத்தின் நெல் தேவையில் தஞ்சை 48%, ஈரோடு சேலம் உள்ளிட்ட மற்ற பகுதிகள் 19 சதவீதத்தையும் பூர்த்தி செய்கின்றன. மீதமுள்ள 33 சதவீதம் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கொண்டுவரப்படுகிறது. பருவநிலை மாற்றம் மற்றும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பால் நெல் மகசூல் பாதிக்கப்பட்டு அரிசி விலை கடுமையாக உயர்ந்தது கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அனைத்து விவசாய நிலங்களை சென்றடையவில்லை. பருவமழையும் பொய்த்தது . இதனால் குருவைக்கு பயிரிட்டு இருந்த 2 லட்சம் ஏக்கர் பயிர் பாதிக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களில் பொன்னி ரக அரிசி சுமார் 20 ரூபாய் வரையிலும், இட்லி அரிசி கிலோவுக்கு பத்து ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நடுத்தர வர்க்கத்தினரை பெரிதும் பாதித்துள்ளது.
கடந்த ஆண்டில் நெல் கொள்முதல் கிலோவிற்கு 19 ரூபாயாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 30 ரூபாயாக உயர்ந்து உள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விளைச்சல் குறைந்துள்ளதால் அடுத்த மாதம் அரிசியின் விலை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அரிசி ஆலைகளுக்கென வெவ்வேறு விதங்களில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அவை குறைக்கப்பட்டால் அதன் தாக்கம் அரிசியின் விலையில் எதிரொலிக்கும் என்பது அவர்களின் கூற்று.
கடந்த ஆண்டு இப்படி போன நிலையில், இந்த ஆண்டு தண்ணீர் இன்றி மேட்டூர் அணை வறண்டுள்ளது . இதனால் ஜூன் 12ஆம் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. பருவ மழை காப்பாற்றினால் தண்ணீர் திறப்பு நடக்கலாம். இல்லையேல் இந்த ஆண்டும் விளைச்சல் குறைந்து அரிசியின் விலை மேலும் அதிகரிக்கும் என்பது அரிசி வியாபாரிகளின் கருத்து.
ஒரு சில விவசாயிகள் மாற்றுப் பயிர்களை நாடிச் செல்வதால் நெல் பயிரிடு குறைந்து வருகிறது. மேலும் விளைநிலங்கள் முதலீட்டு நோக்கங்களுக்காக மாற்றப்படுவதாலும் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் விவசாய நிலங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைகிறது. இப்படியே போனால் தற்போது 80 ரூபாய் வரை விற்கப்படும் அரிசி ரகங்கள் விரைவில் சதம் அடிக்கும்.
தமிழக அரசு விழிப்புடன் இருந்து அரிசி விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். விலை உயர்வால் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாவதை தடுத்து அரிசி ரகங்களிள் விலைகள் குறைவதை உறுதிப்படுத்த வேண்டும்.