முடி வெட்டுவதில் இருந்து மன்னர் முடிசூடும் நிகழ்வு வரை நமது பாரம்பரிய மரபுகளின் பின்னால் நிச்சயம் ஏதாவது ஒரு காரணம் இருக்கும். நமது சடங்குகளில் வாழ்க்கையை நெறிப்படுத்துதல் மட்டுமின்றி உடலை பலப்படுத்தும் நல்ல காரியங்களும் அடங்கி இருக்கும்.
தாம்பூலம் வழங்குவதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் உள்ளது. பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கப்படும்போது அந்த சுவை உடலையும், மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது. இதயத்தையும் வலுப்படுத்துகிறது.
உடம்பில் உள்ள வாதம், பித்தம் , சனசிலேத்துமம் போன்றவை சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ அல்லது குறையும் போதோ நோய் வருகிறது என்பது ஆயுர்வேதத்தில் சொல்லப்படும் காரணம். இந்த மூன்றும் உடலில் சரியாக அமைந்து விட்டால் நோய் வராது என்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிக அளவில் இருக்கும் என்பது உண்மை. இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.
பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தையும், சுண்ணாம்பில் உள்ள கார்ப்பு வாதத்தையும், வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தையும் நீக்க வல்லது. இதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட து. வெற்றிலையோடு புகையிலை சேரும்போது அதன் நல்வினைகள் கிடைக்காமல் போகிறது.
இப்போதுள்ள முதியோர் பலருக்கு ஏற்படுகிற பிரச்சனை எலும்பு முறிவு . 20 ஆண்டுகளுக்கு வரை பெரும்பாலான முதியோருக்கு இந்தப் பிரச்சனை வந்திருக்காது. காரணம் குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடலுக்கு கிடைத்த போது எலும்புகள் வலுப்பெற்றன.
காலையில் சிற்றுண்டிக்கு பின் போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்கும் காரணம் மதிய நேரம் வெப்பம் அதிகமாகும் போது உடலில் அதிக பித்தம் சேராமல் பாதுகாக்கும்.
மதிய உணவிற்கு பின் சுண்ணாம்பு அதிகம் எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள வாதத்தை அது கட்டுப்படுத்தும். இரவில் வெற்றிலையை அதிகம் எடுத்துக்கொண்டால் நெஞ்சில் கபம் தங்காது.
இப்படி தாம்பூலத்திலும் உடல் பிரச்சனைகளை போக்க வழி சொல்லிய நமது மூத்தோரின் அறிவுரைகளை பின்பற்றாமல் போனதால்தான் எல்லாவற்றிற்கும் மருத்துவமனைகளை நாடி செல்கிறோம்.