சேலம் சென்றாய பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர உயர் நீதிமன்றம் உத்தரவு
பழமை வாய்ந்த சேலம் சென்றாய பெருமாள் கோவிலில் விசேஷ தினங்களில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த கோவிலில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதுடன், கோவிலுக்கு செல்லும் பாதையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சாலை குறுகலாகியுள்ளது.
தற்போது புரட்டாசி மாதம் வரவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக ஆலயத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது அடிப்படை வசதிகள் தொடர்பாக அறநிலையத்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து சென்றாய பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தரும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.