முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் அண்மைக்காலமாக அரசியல் பிரமுகர்கள் கொல்லப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது. காரணங்கள் வெவ்வேறாக சொல்லப்பட்டாலும் அரசியல் பிரமுகர்கள் என்ற ஒற்றைப் புள்ளியில் வந்து நிற்கிறது இந்த கொலைச் சம்பவங்கள்.
ஜூலை மாதத்தில் மட்டும் மூன்றாம் தேதி சேலத்தில் தொடங்கிய இந்த கொலை சம்பவத்தின் ஆரம்ப புள்ளி இம்மாத இறுதியில் எட்டாவது கொலையாக கன்னியாகுமரி வரை நீண்டுள்ளது . அரசு தரப்பில் நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டாலும் போன உயிர் போனது தான் , அதை மீட்டு வர முடியாது. உயிர் போன பிறகு குற்றவாளிகளை கைது செய்வது முக்கியம்தான் என்றாலும் பாதுகாப்பு குறைபாடுகளை களைய வேண்டியதும், மாநிலத்தின் குடிமக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டியதும் அரசாங்கத்தின் கடமையாகும்.
சமூக விரோத செயல்களை எதிர்ப்பவர்கள், பொது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்களோ அல்லது இவை இரண்டிலும் பாதிக்கப்பட்டு மக்களிடையே அங்கீகாரம் பெற நினைப்பவர்களும் இறுதியில் புகலிடமாவது அரசியல் மட்டும் தான். இப்போது அதிலும் பாதுகாப்பு இல்லை என்று சூழலால் பொதுமக்களிடையே மட்டுமல்ல அரசியல் கட்சி பிரமுகர்களிடமும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது