பாழகி வரும் ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பூங்கா

கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையை ஒட்டிய சேலம் மாவட்டத்தில் 1164 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உயர்தர கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி மையத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கால்நடை பராமரிப்புத் துறைக்கு சொந்தமாக 1102 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த கால்நடை பூங்கா, 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது.

கால்நடை மருத்துவமனை, கால்நடை மருத்துவக் கல்லூரி, உணவுப் பொருட்களை பாதுகாத்து பதப்படுத்தி அதிலிருந்து உப பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்தும் தொழில்நுட்ப வசதிகள் இங்கு உள்ளன. இது தவிர பயிற்சி , ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோர்களுக்கான பயிலரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.

பல லட்ச ரூபாய் செலவில் நிறுவப்பட்ட உயர் ஆராய்ச்சி கருவிகள் பயன்பாடு இன்றி வீணாகி வருகிறது. பல கட்டிடங்கள் முட்புதர்கள் வளர்ந்து பாழடைந்துள்ளது. இறைச்சி பதப்படுத்தும் கட்டிடம் அமைந்துள்ள வளாகம் எவ்வித பாதுகாப்பும் என்று திறந்து கிடப்பதால் சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறி உள்ளது.

ஆவின் நிறுவனத்திற்காக இங்கு 110 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து 100 கோடி ரூபாய் நிதியும் வழங்கப்பட்டது . ஆனால் பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.

இங்குள்ள கால்நடை அறிவியல் நிலையத்தில் 500 பசு மாடுகளை வளர்த்து, அதன் மூலம் பால் உற்பத்தியை பெருக்கவும், பால் உபப்பொருட்களை தயாரித்து மிகப்பெரிய சந்தை வாய்ப்பை உருவாக்கி புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டது. நிகழும் என்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு கானல் நீராகிப் போனதுதான் மிச்சம்.

ஆடு ,கோழி, மீன், பன்றி இறைச்சிகளை பதப்படுத்தி விற்பனை செய்வதற்காக அதிநவீன குளிர்சாதனக்கூடம் அமைக்கப்பட்ட நிலையில் அதுவும் பயன்பாடு இன்றி பாழடைந்து கிடக்கிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி மையம் என்பது பெயரளவிற்கு மட்டுமே உள்ளதே தவிர நான்கு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்த மையம் திறக்கப்பட்டால் இப்பகுதியில் கால்நடை மற்றும் கோழி உற்பத்தியை பெருக்கி பெருமளவில் பயனடையலாம் என எதிர்பார்த்த விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தொழில் வாய்ப்பு மையம் அருகில் பயன்பாட்டில் இருந்தால் மக்கள் ஏன் வேறு தொழில்களுக்குச் சென்று கள்ளச்சாராயம் அருந்தி பலியாகப் போகிறார்கள் ?

இந்த மையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு துரித நடவடிக்கை எடுத்தால் மக்களின் வாழ்வாதாரமும் பெருகும். கள்ளச்சாராய விற்பனையும் குறையும்.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்