சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகும் திமுக – நாள்தோறும் ஒரு அறிவிப்பு- மக்களின் ஆதரவு குறைவதால் அதிர்ச்சி!
மக்களவைத்தேர்தல் அறிவிப்பிற்கு முன்பு தினமும் ஒரு திட்டம், அறிவிப்பு என்ற பெயரில் மக்களைக் கவர்ந்து ஓட்டுக்களை பெற்ற ஆளும் திமுக , மறுபக்கம் கள்ளச்சாராயம், அரசியல் படுகொலைகள், மின் கட்டண உயர்வு என மக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டு வருகிறது.
மின் கட்டண உயர்வினை பொதுமக்கள் எதிர்க்கமாட்டார்கள் என்று எண்ணியதற்கு மாறாக மக்கள், தொழில்துறையினர் குறிப்பாக சிறுதொழில் முனைவோர் என பலதரப்பிலும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.
இவற்றை சமாளிக்க வழியின்றி மக்களது கவனத்தை திசைதிருப்பும் விதமாக மீண்டும் பழைய யுக்தியை கையாளத் தொடங்கியுள்ளது ஆளும் திமுக அரசு.
அதன் ஒரு கட்டமாக, இன்று 2500சதுர அடி பரப்பளவு மனையில், 3500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு உடனடியாக ஒற்றைச்சாளர முறையில் கட்டட அனுமதிகளைப் பெறும் ஒருங்கிணைந்த புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டங்களுக்கு யாரும் எதிர்ப்பாளர்கள் இல்லை. அவை முறையாக தொடர்கிறதா என்பதே முக்கியம். மக்களின் கவனத்தை ஈர்க்க இதுபோன்ற அறிவிப்புகளை கொண்டுவந்து பின்னர் கணிணி பிரச்சனை, சர்வர் கோளாறு அதனால் பழைய முறையே தொடர்கிறது என்ற அறிவிக்கப்படாத உத்தரவுகள் கடைபிடிக்கக்கூடாது.
இது ஒரு ஆரம்பம்தான். இனி நாள்தோறும் ஒரு அறிவிப்புகள் வெளியாகும், திட்டங்களும் தொடங்கிவைக்கப்படும். ஆனால் அவை தொடர்ந்து பின்பற்றப்படுமா என்பது கேள்விக்குறியே!