32,000 ரூபாயில் திரைப்படம்…. 140 ரூபாய் சம்பளம் , சிவாஜியையே இரண்டாவது ஹீரோவாகிய கதாநாயகன்……
1940 களில் தமிழ் திரைப்படங்களின் ஹீரோ என்றால் பலசாலியாக, வாளெடுத்து சண்டை போட தெரிந்திருக்க வேண்டும் என்ற கோட்பாடுகள் பரவலாக இருந்தன. இதை தகர்த்தவர் டி ஆர் ராமச்சந்திரன்.
உருண்டையான கண்களையும் வித்தியாசமான உடல் மொழியையும் கொண்ட இவர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் வெளுத்துக் கட்டியவர். முட்டாள்தனம், புத்திசாலித்தனம், குறும்புத்தனம் , அப்பாவித்தனம் வெட்கம் கலந்த காதல் உணர்ச்சி என கலவையான உடல் மொழிக்கு சொந்தக்காரர்.
காமெடி நடிகர்களுக்கு தனியாக கதை எழுதி நாயகனாக்குவது என்பதை அப்போதே தொடங்கி வைத்தவர். நடிகர் திலகத்தையே இரண்டாவது ஹீரோவாகிய பெருமையும் இவருக்கு உண்டு . கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்ற திரைப்படம் தான் அது.
இசைவாத்தியங்களை முறைப்படி கற்ற ராமச்சந்திரன், நாடகங்களில் பின்பாட்டு பாடும் பாடகராக இருந்து, நடிப்பது போன்ற பாவனைகளுடன் பாட கற்றுக் கொடுக்க நடிப்பு மீது காதல் வந்தது.
1936 இல் மதுரையில் ஜெகநாத ஐயர் நடத்திய நாடக கம்பெனியில் 3 ரூபாய் சம்பளத்தில் கலை வாழ்க்கையை தொடங்கி, 1938 இல் நந்தகுமார் என்ற திரைப்படத்தில் டி ஆர் மகாலிங்கத்துடன் இணைந்து அவரது நண்பராக நடித்தார்.
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மன இறுக்கத்தில் இருந்த மக்களுக்கு நகைச்சுவை படங்கள் நல்ல மாறுதலாக இருக்கும் என்று நினைத்த மெய்யப்பச் செட்டியார், பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நகைச்சுவை நாடகமான சபாபதியை அதே பெயரில் படமாக்கினார். நாடகத்தில் நடித்த அதே ராமச்சந்திரனே 1941 இல் வெளியான சபாபதியிலும் நடித்திருந்தார். முழு நீள நகைச்சுவை திரைப்படமான இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
5 பாடல்களை தனது குரலில் பாடிய ராமச்சந்திரன், இப்படத்திற்காக பெற்ற ஊதியம் 140 . அன்றைய காலகட்டத்தில் இந்தப் படத்தில் மொத்த பட்ஜெட்டே 32000 ரூபாய் தான். எத்தனை நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் உருண்டையான கண்கள், வித்தியாசமான உடல் மொழிகளை கொண்ட ராமச்சந்திரனின் நகைச்சுவைகள் என்றும் மறக்காது.