தமிழ் சினிமாவில் முதல் பிரம்மாண்டம் சந்திரலேகா …… காலத்தால் அழியாத சாதனைகள்!
உலக சினிமாவிற்கு சவால் விடும் வகையில் இன்றைக்கு பல தொழில்நுட்பங்களை தமிழ் சினிமா கையாண்டு வருகிறது. அண்மையில் வெளியான கல்கி திரைப்படத்தை இதற்கு உதாரணமாக சொல்லலாம் . எனினும் தமிழ் சினிமாவின் முதல் பிரம்மாண்டம் என்றால் அது S.S. வாசனின் சந்திரலேகா திரைப்படம் தான் .
படப்பிடிப்பிற்காக மட்டுமே 5 ஆண்டுகள் எடுத்துக் கொண்ட நிலையில் இறுதியாக 1948 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் பல இமாலய சாதனைகளை படைத்தது. படத்தின் பிரம்மாண்டத்திற்கு ஏற்ப கதையும், காட்சி அமைப்புகளும் இருந்தன. இதுதான் இந்த படத்தை மாபெரும் வெற்றி பெற செய்தது.
இந்தியிலும் இது மொழி மாற்றம் செய்யப்பட்டது. இந்த படத்திற்கான செலவு மட்டும் 30 லட்சம் ரூபாய். இதன் தற்போதைய மதிப்பு 176 கோடி என்றால் அதனை நம்பித்தான் ஆக வேண்டும் . திரைப்படத்தை பிரபலப்படுத்த மட்டுமே 5 லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டது. இதில் ஹிந்தி நடிகர்கள் இல்லை என்றாலும் வட இந்தியர்கள் பெரிதும் விரும்பி திரையரங்குகளுக்கு சென்றனர் என்றால் அதன் காரணம் இதற்காக மேற்கொள்ளப்பட்ட விளம்பரம் தான் . ஒரு தமிழ்த் திரைப்படம் முதல் முதலாக வடக்கே மொழிமாற்றம் செய்யப்பட்டு வெற்றி பெற்றதை இங்கு நினைவு கூற வேண்டும்.
இப்போதெல்லாம் பான் இந்தியா என்கிறார்கள். ஆனால் அன்றே உலக அளவில் பரவியது என்றால் அது சந்திரலேகா தான். ஜப்பான் மொழியில் முதல் முதலாக மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியான இந்திய திரைப்படம் என்ற பெருமையும் சந்திரலேகாவுக்குத்தான்.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்தே தமிழகத்தின் பல்வேறு திறை நிறுவனங்கள் வடக்கே கால் பதித்தன என்பதையும் மறுப்பதற்கில்லை.