தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழும் அரசியல் படுகொலைகள், கட்சியினர் மட்டுமின்றி பொது மக்களிடமும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகம் அமைதி பூங்கா என்று ஆளும் தரப்பில் சொல்லப்பட்டு வந்தாலும்,நாள்தோறும் நடக்கும் பல்வேறு சம்பவங்கள் மாநிலத்தில் அமைதி நிலவரத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 1597 கொலைகள் நிகழ்ந்துள்ளன. கூட்டுக் கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் உட்பட 26 வகையான குற்றங்கள் தொடர்பில் லட்சக்கணக்கான வழக்குகள் பதகவு செய்யப்பட்டுள்ளன.
திருட்டு, கொள்ளை சம்பவங்களை தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள் கொல்லப்பட்டு வருவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 5அரசியல் பிரமுகர்களின் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன.
2024 பிப்ரவரி மாதம் வண்டலூரில் திமுக ஒன்றிய செயலாளர் ஆராமுதன், மே மாதம் நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், பசுபதிபாண்டியன் ஆதரவாளர் தீபக் ராஜா, கடந்த வாரம் சேலத்தில் அதிமுக நிர்வாகி சண்முகம் மற்றும் கடந்த ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் ஆகியோர் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர்.
இந்த கொலைகளுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவை அனைத்தும் முடியும் ஒரு புள்ளி அரசியல் . இந்த படுகொலைகள் குறித்து தெளிவான விளக்கங்களையும், உண்மையான குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்தினால்தான் ஆளுகின்ற அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும் . இல்லையேல் 2026 இல் படுவீழ்ச்சியைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும்.