936 ஏக்கர் பரப்பளவு உள்ள சேலம் பனைமரத்துப்பட்டி ஏரி மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருந்தும் எந்தவித பயன்பாடும் இல்லாமல் இருக்கிறது. முக்கிய ஏரிகளில் ஒன்றாக கருதப்பட்டாலும் திரைத்துறையுடன் தொடர்புடைய ஏரியான இதனை சீரமைக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதலாளி, சட்டம் ஒரு இருட்டறை ,புதிய தோரணங்கள் என சுமார் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இந்த ஏரியை காட்சியாக வைத்து எடுக்கப்பட்டுள்ளன. இதற்காகவே திரைத்துறையினர் தங்குவதற்கு என ஏரியை ஒட்டிய அடிக்கரை பகுதியில் பெரிய வீடு ஒதுக்கப்பட்டது.
கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், கவியரசு கண்ணதாசன் ஆகியோர் இங்கு தங்கி திரைக்கதை மற்றும் பாடல்களை எழுதி உள்ளனர்.
ஆங்கிலேயர் காலத்தில் 1911 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த வீட்டை டிபி பங்களா என பெயரிட்டு அழைத்தார்கள் . இந்த வீட்டின் ஜன்னல், கதவு அனைத்தும் தேக்கு மரத்தால் செய்யப்பட்டது. வீட்டின் உள்ளே மரத்தாலான சாமான்கள் அதிக அளவில் இருந்தன. அவையெல்லாம் எங்கு போனது என யாருக்கும் தெரியவில்லை.
மக்கள் திலகமும், முத்தமிழ் அறிஞரும் இங்கு தங்கி பனமரத்து பட்டியில் ஒரு நாடகம் நடித்து அதில் கிடைத்த பணத்தை பள்ளி கட்டிடம் கட்ட நிதியுதவி அளித்துவிட்டு சென்றனர். இந்த பெருமை இன்றும் சந்தைப்பேட்டை பள்ளிக்கு இருந்து வருகிறது.
கேட்பாரற்று கிடக்கும் இந்த வீட்டை… இல்லையில்லை…. பங்களாவை புனரமைத்து நினைவுச் சின்னமாக மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் . செவி சாய்குமார் மாவட்ட நிர்வாகம்?