சென்னையில் உள்ள சாந்தி திரையரங்கம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு சொந்தமானது. அதற்கு ஈடான வகையில் சேலத்தில் சிவாஜி திரைப்படங்களாக வெளியிட்டு பல படங்களை வெள்ளி விழா வாக்கிய பெருமை சாந்தி திரையரங்கத்தை சாரும். இது மட்டுமின்றி பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை உள்ளடக்கிய பெருமையும் இந்த திரையரங்கிற்கு உண்டு.
1962 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சாந்தி திரையரங்கில் முதல் படமாக சிவாஜி கணேசன் அவர்களின் வடிவுக்கு வளைகாப்பு படம் திரையிடப்பட்டு 100 நாட்களைக் கடந்தும் ஓடியது. திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர் என வரிசையாக நடிகர் திலகத்தின் படங்கள் வெளியாகி சக்கை போடு போட்டன. 1970 இல் வியட்நாம் வீடு, ராமன் எத்தனை ராமனடி, எங்கிருந்தோ வந்தாள் இந்த மூன்று திரைப்படங்களும் வசூலை வாரி குவித்தன. அந்த ஆண்டு மட்டுமே முழுவதுமாக இந்த திரையரங்கில் நடிகர் திலகத்தின் படங்கள் தான் ஓடின. பிரம்மாண்டம் இல்லாத அந்த காலத்திலேயே இந்த திரையரங்கில் வந்த படங்களுக்கு ஹெலிகாப்டரில் இருந்து நோட்டீஸ் வீசியதை கண்டு சேலம் நகரமே பிரமித்தது
நடிகர் திலகம் படம் மட்டுமல்லாது எம்ஜிஆர் படங்களிலும் கொடிகட்டி பறந்தது சாந்தி திரையரங்கம். எங்க வீட்டு பிள்ளை, வேட்டைக்காரன், அடிமைப்பெண் என ஏராளமான படங்கள் 100 நாட்களை கடந்தும் ஓடின. எங்க வீட்டுப் பிள்ளை வெற்றி விழாவிற்கு எம்ஜிஆர், சரோஜாதேவி , நாகேஷ் என அனைத்து கலைஞர்களும் சாந்தி தியேட்டருக்கு வருகை தந்தனர் .
இவர்களின் தலைமுறை கடந்து அடுத்து வந்த எண்பதுகளின் தலைமுறைக்கும் சாந்தி திரையரங்கு தான் சொர்க்கம். ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களும் சேலத்தின் சாந்தி திரையரங்கில் பார்ப்பது பெருமையாக பார்க்கப்பட்டது .
இந்த திரையரங்கில் இடைவேளையின்போது விற்கப்படும் முறுக்கு, தட்டு வடை போன்ற உணவுப் பொருட்கள் அனைத்தும் அற்புதமான சுவையுடன் இருக்கும். தரை, மொட்டை பெஞ்சு, இருக்கை என திரையரங்குகள் இருந்த காலத்தில் சாந்தி திரையரங்கில் தான் எல்லா வகுப்புகளுக்கும் கைப்பிடி வைத்த முழு இருக்கைகள் அமைக்கப்பட்டன.
ஒவ்வொரு வரிசையிலும் குண்டாக இருப்பவருக்காக தனியாக ஒரு இருக்கை இருந்தது சிறப்பு. பெண்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதனால் அவர்களுக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே டிக்கெட் வழங்கப்படும்.
இப்படி இரண்டு மூன்று தலைமுறைகளின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்த சாந்தி திரையரங்கம் கால மாற்றங்களால் இருந்த இடம் தெரியாமல் போனது.
அதன் நினைவாக ஒரு புகைப்படங்கள் கூட இல்லை என்பது வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது. வலைதளங்களில் கூட அதன் புகைப்படங்கள் கிடைக்கவில்லை, ஒரே ஒரு புகைப்படத்தை தவிர.
தற்போதைய நிலையில் இந்தத் திரையரங்கம் நீதிமன்றம் வழக்கில் இருப்பதாக கூறினார்கள். இதனால் மேலும் தகவல்களையும் அறிய இயலவில்லை
அது இருந்த இடத்தை கடந்து செல்லும் அன்றைய தலைமுறையினருக்கு நிச்சயம் அந்த கால நினைவுகள் ஒரு நிமிடம் கண் முன் வந்து செல்லும்.