போட்டித் தேர்வுகளில் தமிழில் 40% மதிப்பெண் – எதிர்த்து வழக்கு தொடுத்தவருக்கு நீதிபதி காட்டமான கேள்வி
தமிழக அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்படுவதற்கான அரசாணையை 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம். பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ் தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும்.தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி கட்டாயமாக்கப்படுகிறது. தமிழில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணையில், “விண்ணப்பதாரர்களுக்கான கல்வித் தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. குரூப் 4 பதவிகளை வகிப்பவர்கள், மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள தமிழ் மொழியில் புலமை பெற்றிருப்பது அவசியம் என்ற அரசு வாதத்தை நீதிபதி ஏற்றார்.
தமிழ் மொழித் தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றுதான் அரசு கூறுகிறதே தவிர, நூறு சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என வற்புறுத்தவில்லை என்றும் காட்டமாக தெரிவித்தார்.
அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது” என திட்டவட்டமாக தெரிவித்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
2021 அரசாணையை எதிர்த்து நிதேஷ் உட்பட 10 விண்ணப்பதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த ஆண்டு காலியாக உள்ள 6244 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை ஜனவரியில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.