மாணவர்களின் செயல்பாடுகளை பெற்றோர்களுக்கு எளிதில் தெரிவிக்கும் வகையில் whatsapp செயலி வாயிலாக புதிய தளத்தை உருவாக்கியுள்ளது கல்வித்துறை . இந்த தளத்துடன் பெற்றோரின் எண்களை இணைத்து அதில் மாணவர்களின் படிப்பு சம்பந்தமான செயல்பாடுகள் குறித்து உடனுக்குடன் தெரிவிக்கப்படும்.
பள்ளிக்கல்வித்துறை கீழ் செயல்படும் கல்வி மேலாண்மை தகவல் முகவை எனும் EMIS செயலியில் இது பதிவாகி இருக்கும். இதற்கென மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்களை சரி பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒன்றேகால் கோடி செல்போன் எண்கள் உள்ள நிலையில் இதுவரை 82 லட்சம் எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. அவர்களது WHATSAPPல் DEPARTMENT OF SCHOOL EDUCATION என்ற பெயரில் தளம் உருவாக்கப்பட்டு கல்வித்துறையின் செயல்பாடுகள் பதிவிடப்பட்டு வருகின்றன.
இதற்காகவே குறைந்த விலையிலாவது ஸ்மார்ட் ஃபோன்களை வாங்கி வைக்கும்படி பெற்றோரிடம் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கல்வித் துறையின் இந்த செயல்பாடு மகிழ்ச்சியாக இருந்தாலும் நாளடைவில் மங்கி விடக் கூடாது என்பதே பெற்றோரின் எதிர்பார்ப்பு. இது வெற்றியடையுமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிய வந்து விடும்.