நாட்டிலேயே நமது மாநிலத்தில் தான் அதிக அளவில் கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. அதனால் தான் வெளிமாநிலங்களில் இருந்து ஆண்டு தோறும் பல நூறு மாணவர்கள் இங்கு வந்து படிக்கிறார்கள் . அந்த அளவிற்கு கல்வியில் நமது கல்லூரிகள் சிறப்பான இடங்களை பெற்றுள்ளன . வெளி மாநில மாணவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பது போல நம் மாநில மாணவர்களும் உயர்கல்வியை முடித்து வெளி மாநிலம் மற்றும் நாடுகளில் பணிக்குச் செல்கின்றனர். இந்த மாணவர்கள் எந்த பள்ளிகளில் படித்து வந்தவர்கள்?
பெரும்பாலானோர் தனியார் பள்ளிகளில் படித்து வந்தவர்கள் தான் . அரசு பள்ளி மாணவர்கள் வெகு சிலர்தான் இதில் உள்ளனர். ஏன் அரசு பள்ளி மாணவர்கள் குறைவான எண்ணிக்கையில் உயர்கல்வியில் சேர்கின்றனர்?
கல்வித்துறையில் அரசாங்கம் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன? அலசி ஆராய்வோம் .
பிளஸ்-2 முடித்து விட்டீர்களா !
அடுத்து என்ன என்று திரும்பிப் பார்த்தால் எங்கு பார்த்தாலும் நுழைவுத் தேர்வு தான் . எந்த படிப்பை தேர்ந்தெடுத்தாலும் நுழைவுத் தேர்வு தான். அதில் தேர்ந்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட உயர்கல்வியை படிக்க முடியும்.
இதனால் தான் தனியார் பள்ளிகள் முதலில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்புகள் எடுத்து நுழைவுத்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் படுத்தின. இதுவும் போதாது என்று இப்போது ஆறாம் வகுப்பு முதல் நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் படுத்தி வருகின்றன. இதற்கென தனி வகுப்புகளை உண்டாக்கி மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதனால் நுழைவுத் தேர்வு என வரும்போது மாணவர்கள் அதிகம் அவதிப்படாமல் எளிதில் எதிர்கொண்டு வெற்றி பெறுகிறார்கள் . வசதி படைத்த குடும்பத்தாரின் பிள்ளைகள் பலர் தனியார் நிறுவனங்கள் அளிக்கும் பயிற்சிகளில் ஆயிரங்கள் , லட்சங்கள் என செலவு செய்து படிக்கின்றனர் .
ஆனால் அரசு பள்ளிகளில் ?
அரசு பள்ளிகளில் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தார் தான் தங்கள் பிள்ளைகளைப் படிக்க அனுப்புகின்றனர். அவர்களுக்கு இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு தங்களது பிள்ளைகளை தயார் செய்வதற்கு பணம் செலவு செய்ய இயலாது. நன்றாக படித்தும் நுழைவுத் தேர்வுகளை எதிர் கொள்ள மாணவர்கள் சிரமப்படக்கூடாது என உணர்ந்துள்ள அரசு 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான பயிற்சிகளை வழங்கி வருகிறது. ஆனால் இது போதாது. வளர்ந்து வரும் காலகட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆறாம் வகுப்பு முதலே நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சிகளை அரசு இலவசமாக அளிக்க வேண்டும். அவர்களுக்கு அதிக அளவில் பயிற்சிகளை அளிக்க வேண்டும் .
சில படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கூடாது அகற்ற வேண்டும் என்ற வாதங்கள் இருந்தாலும் கடல் போல் உள்ள கல்வியில் கற்பதற்கு ஏராளம் உண்டு. நுழைவுத் தேர்வுகள் இருந்தாலும் இல்லாமல் போனாலும் கற்ற கல்வி எங்கும் மாயமாகி போகாது.
அதனால் அரசாங்கம் மனது வைத்து ஆறாம் வகுப்பு முதல் , மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான பயிற்சிகளை வழங்கிட வேண்டும் .
இந்த மாற்றத்தைக் கொண்டு வந்தால் நுழைவுத் தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்கள் பெருமளவில் சாதிக்க முடியும்.