மக்கள் இடையே ஆரவாரமான கொண்டாட்டங்களை ஏற்படுத்தும் சினிமா இன்று அதிவேகமாக முன்நோக்கி செல்வது பிரமிக்கத்தக்க இருந்தாலும், ஏறக்குறைய கொரோனாவிற்கு முன்பு மக்கள் மத்தியில் ஏற்படுத்திய உற்சாகமும், கொண்டாட்டமும் தற்போதைய சூழலில் மிகவும் குறைந்தபடியே இருக்கிறது. காரணம் அன்று ஒரு படம் தியேட்டரில் ரிலீஸ் ஆவதே திருவிழா போல் தோற்றமளிக்கும். ஆனால் இன்று பல்வேறு தொழில்நுட்ப வசதியால் இருந்த இடத்தில் இருந்தே நினைத்த படங்களை நினைத்த நேரத்தில் பார்க்க முடிகிறது. இதனால் தியேட்டரின் மவுசும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு இருக்கிறது.
இருப்பினும் இந்திய அளவில் ஏன் உலகளவில் மக்களிடையில் சினிமாவின் தாக்கம் மாறாமல் அப்படியே தான் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தமிழ் சினிமாவின் வரலாற்றை ஆராய்கையில் மிகவும் ஆச்சரியம் மிக்க தகவல்கள் தெரிய வருகிறது.
சேலத்தில் பிறந்த டி.ஆர்.எஸ் முதலாளி என்று அழைக்கப்பட்ட டி.ஆர்.சுந்தரம், 1935 இல் பிரிட்டனில் தன்னுடைய பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். அன்றைய காலகட்டத்தில் பிரிட்டனில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய சினிமா தமிழ்நாட்டிலும் ஏதோ ஒரு மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும் என்று உணர்ந்துள்ளார்.
ஆரம்பத்தில் இருந்தே சினிமாவின் மீது தனக்கு இருந்த ஆர்வத்தை ஈடுபாட்டையும் விட சினிமாவின் மீது விருப்பம் இல்லாமல் இருந்த நண்பர்கள் சுப்பிரமணியம் மற்றும் வேலாயுதம் உடன் இணைந்து ஏஞ்சல் பிக்சர்ஸ் என்ற ஒரு சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் சேர்கிறார்.
தொழில்நுட்ப வசதிகள் குறைவாக இருந்த காலத்தில் படம் ஒளிப்பதிவு முடிந்தவுடன் எடிட்டிங் மற்றும் மிக்ஸிங் போன்றவற்றிற்கு மும்பை அல்லது கொல்கத்தாவிற்கு தான் செல்ல வேண்டிய நிலை இருந்தது.
இதையடுத்து இதற்கு தீர்வாக டி.ஆர்.எஸ் தானாக முன்வந்து சேலம் ஏற்காடு அடிவாரத்தில் 15 ஏக்கர் இடம் வாங்கி, அந்த இடத்தில் பிரமிக்க வைக்க கூடிய முகப்புடன் ஸ்டுடியோ ஒன்றை கட்டி அதற்கு The Modern Theatres Ltd என்று பெயரும் இட்டார்.
மார்டன் தியேட்டர்ஸ் பல்வேறு அசாத்திய கலைஞர்கள் கண்ட இடமாக தோற்றமளிக்க தொடங்கியது.
மார்டன் தியேட்டர்ஸ் வளாகம் வெறும் ஒளிப்பதிவுக்கு மற்றும் இன்றி எடிட்டிங் ரூம், ரெக்கார்டிங் ஸ்டுடியோ போன்ற அனைத்து சினிமா தொழிநுட்ப வசதிகளையும் உள்ளடக்கியதாய் கட்டமைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்து சேலம் தென்னிந்தியாவின் சினிமா தலைமையகமாகவே கருதப்பட்டது.
இன்றளவு உள்ள தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாத போதே பல ஆச்சரியமூட்டும் செயல்களை அன்றே மார்டன் தியேட்டர்ஸ் செய்து காட்டியுள்ளது.
மார்டன் தியேட்டர்ஸ் இன் முதல் திரைப்படம் தான் “சதி அகல்யா”. அப்போதைய காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கண்ணியான சிங்களத்தை சேர்ந்த தவமணி தேவி தான் இப்படத்தின் கதாநாயகி. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் சிறந்த படமாகவும் விளங்கியது.
எம்.ஜி.ஆர், ஜானக்கி, என்.டி.ஆர் மற்றும் டாக்டர் கலைஞர் என பல முக்கியமான நபர்களின் வாழ்க்கை பயணம் தொடங்கியதே மார்டன் தியேட்டர்ஸ் இல் தான்.
1941 ஆம் ஆண்டு பி.யு.சின்னப்பா நடிப்பில் வெளிவந்த உத்தமபுத்திரன் திரைப்படத்தில் தான் முதல் முதலில் இரட்டை கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டன.
அதுவரை கருப்பு வெள்ளையில் மட்டுமே திரைப்படம் வெளியான நிலையில்,
1956 இல் எம்.ஜி.ஆர் நடிப்பில் அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற திரைப்படம் தான் தமிழில் வெளிவந்த முதல் கலர் திரைப்படமாக இருந்தது.
தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் படங்கள் இங்கு தான் தயாரிக்கப்பட்டும் இருக்கிறது. இவற்றைவிடவும் இந்தியாவின் முதல் ஆங்கில படமான “The Jungle” என்ற படத்தையும் மார்டன் தியேட்டர்ஸ் தான் தயாரித்து உள்ளது.
இன்றைக்கு பிரபலமான மூன்றில் இருந்து ஐந்து கதைகளை ஒரே படத்தில் காட்டும் “Anthology” படங்களை கூட அன்றே மார்டன் தியேட்டர்ஸ் தயாரித்தும் இருந்தன.
மிகப்பெரிய நகைச்சுவை நடிகரான நடிகை மனோரமா முதலில் கதாநாயகியாக நடித்தது மார்டன் தியேட்டர்ஸ் தயாரித்த கொஞ்சும் குமரி என்ற திரைப்படத்தில் தான்.
தென்னிந்தியாவின் திரை உலகின் பிரம்மா என்ற டி.ஆர்.ஸை அழைத்து இருந்துகிறார்கள். ஏனெனில் மார்டன் தியேட்டர்ஸ் அந்த அளவிற்கு அசாத்தியமான சாதனைகளை சேலத்தில் இருந்து படைத்து இருக்கிறது.
அதையடுத்து டி.ஆர்.எஸ் மறைவுக்கு பின் சென்னையில் பல சினிமா ஸ்டுடியோகள் உருவாக்கப்பட்டன. காலங்கள் கடக்க மார்டன் தியேட்டர்ஸ்ல் வேலைகள் மங்க தொடங்கி இன்று குடியிருப்புகள் ஆக மாறிவிட்டது. ஆயினும் அதன் நுழைவாயில் மாறாமல் இன்றளவும் அழியாத பல புகழ் பெற்ற நினைவுகளையும் தலை சிறந்த வரலாற்றையும் மார்டன் தியேட்டர்ஸ் தாங்கி கொண்டே தான் இருக்கிறது.