குழந்தைகளுக்கு நைட்ரஜன் கலந்த எந்த உணவுப் பொருட்களையும் கொடுக்கக்கூடாது. உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்கக் கூடாது. மீறினால் 10 ஆண்டு சிறை தண்டனை . மற்றும் 10 லட்ச ரூபாய் அபராதம் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏன் இந்த திடீர் எச்சரிக்கை? நைட்ரஜன் கலந்த உணவுப் பொருளால் என்னென்ன கேடு? விரிவாக பார்க்கலாம்.
மிகக் குறைந்த வெப்ப நிலையில் திரவ நிலையில் இருக்கும் இந்த நைட்ரஜனுக்கு நிறமில்லை, வாசனையில்லை , இதன் வெப்பநிலை மைனஸ் 190 டிகிரி செல்சியஸ் . எந்த பொருளையும் உடனுக்குடன் உறைய வைக்கும் தன்மை திரவ நைட்ரஜனுக்கு உண்டு.
ஐஸ்கிரீம், இறைச்சி வகைகளை பதப்படுத்துவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது. திரவ நிலையில் இருந்து வாயுவாக மாறும் போது அதன் தன்மை மிகவும் ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். அதே நைட்ரஜன் வாயுக்கள் நம் உடம்பிற்குள் செல்லும்போது வயிற்று வலி , மூச்சுத் திணறல், இதையும் தாண்டி மரணம் ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆவியாகும் போது காற்றில் உள்ள ஆக்சிஜனின் அளவை குறைக்கும் தன்மை திரவ நைட்ரஜனுக்கு இருப்பதாலேயே மூச்சுத்திணறல் ஏற்படுகிறது . உடம்பில் ஏதாவது ஓரிடத்தில் இது பட்டால் உறைபனி அல்லது தீக்காயங்களை ஏற்படுத்தும்.
ஒரு லிட்டர் திரவ நைட்ரஜன் 700 லிட்டர் கேஸ் வாயுவை வெளிப்படுத்தும். இதிலிருந்து வரும் நீராவி உடல் உள்ளுறுப்புகளுக்குள் சென்று திசுக்களை உறைய வைத்திடும். இதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது உடல் உறுப்புகளில் துளையைக் கூட ஏற்படுத்தக்கூடும்.
ஐஸ் கிரீமில் மட்டுமே இதனை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது கேளிக்கைகளுக்காக நைட்ரோ ஸ்நாக்ஸ் என்ற பெயரில் கேக் , பிஸ்கட், சாக்லேட் ஆகிய பொருட்கள் மீது இதனை ஊற்றி விற்பனை செய்து வருகின்றனர். இதன் ஆபத்து தெரியாமலேயே மக்களும் இதனை பயன்படுத்தி வருகின்றனர் .
உணவு வகைகளில் இந்த நைட்ரஜனை நைட்ரோ பிஸ்கெட், நைட்ரோ கார்ன் போன்றவைகளில் சேர்க்கின்றனர். நைட்ரஜன் வாயு முழுவதும் வெளியேறிய பிறகு அந்த உணவை சாப்பிட்டால் ஆபத்து ஏதும் இல்லை . ஆனால் உணவில் கலந்து சாப்பிடும் போது நைட்ரஜன் வாயு வாய் மற்றும் மூக்கு வழியாக வெளியேறுவதை நம்மால் காண முடியும். இந்த வாயு நம் உடலில் எங்கெல்லாம் படுகிறதோ அந்த உறுப்புகள் எல்லாம் பாதிப்படைய வாய்ப்புகள் உண்டு. கண்ணில் பட்டால் பார்வை பறிபோகும் நிலையும் ஏற்படும்.
நைட்ரோ ஸ்நாக்ஸ் எந்த அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு விஷத்தை உண்பதற்கு சமம் என்கிறார்கள் மருத்துவர்கள். இத்தனை கொடூர முகம் கொண்ட திரவ நைட்ரஜனை கேளிக்கைக்காக மட்டுமல்ல முற்றிலுமாக சாப்பிடுவதை நிறுத்துவதே சிறந்தது.
இதனை தடை செய்வதற்காகவே உணவு பாதுகாப்புத் துறை மிக கடினமான எச்சரிக்கையை தாமதமாக விடுத்துள்ளது. திரவ நைட்ரஜனை பயன்படுத்தி உணவு பொருட்களை வழங்கினால் பத்து வருட சிறை மற்றும் 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நடவடிக்கைக்காக காத்திருக்காமல் இதுபோன்ற உணவு பொருட்கள் தயாரிப்பது தெரிந்தால் உடனுக்குடன் உணவு பாதுகாப்பு துறைக்கு பொதுமக்களாகிய நாம் தான் தகவல் தெரிவித்து அனைவரையும் பாதுகாக்க வேண்டும்