மண்ணில் போட்டதும், பொன்னில் போட்டதும் வீணாகாது என்று முதுமொழி உண்டு. அதனை நிரூபிக்கும் வகையில் கடந்த 15 நாட்களில் மட்டும் சவரன் தங்கம் ஒரேடியாக நான்காயிரம் ரூபாயை கடந்துள்ளது.
மார்ச் மாதம் 28ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் 50,000 ஐ தொட்டது. ஏப்ரல் 12ஆம் தேதி இதன் விலை 54 ஆயிரத்தை கடந்தது. ஏன் இந்த ஏற்றம்? நடுத்தர மக்களை பாதிக்கின்ற இந்த ஏற்றம் நீடிக்குமா?
மங்கையர் மட்டுமல்ல ஆடவரும் தங்கத்தின் மீது காதல் கொண்டவர்கள் தான் அதனால்தான் தங்கத்தை அணிவதில் அனைவருமே ஆர்வம் காட்டி வருகின்றனர். விலை ஏற்றம் இருந்தாலும் , வாங்கும் கிராமை குறைத்துக் கொண்டு தங்கள் ஆசையை போக்கிக் கொள்கின்றனர் நடுத்தர வர்க்கத்தினர் .
கடந்த மார்ச் மாதம் மட்டும் சுமார் 9 விழுக்காடு ஏறியுள்ளது தங்கத்தின் விலை. 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு மிக அதிகபட்ச ஒரு மாத விலை உயர்வு சதவீதம் இதுவாகும். ஏன் தங்கம் விலை ஏறுகிறது? சர்வதேச காரணிகள் தான் இதற்கு காரணம்.
தங்கம். இன்னும் சில தினங்களில் , இல்லை இல்லை ஓரிரு தினங்களில் 55 ஆயிரத்தை சவரன் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விலையேற்றம் நடுத்தர வர்க்கத்தை தான் பெரிதும் பாதிக்கிறது. திருமணம் வீட்டு விசேஷங்களுக்கு அணிவிக்கப்படும் தங்கத்தை இனி குறைவாகவே வாங்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தங்கத்தின் தோழனான வெள்ளி மட்டும் தாழ்ந்ததா என்ன? நீ ஒரு பக்கம் ஏறு, நான் ஒரு பக்கம் ஏறுகிறேன் என தங்கத்திற்கு சவால் விடும் வகையில் வெள்ளியும் ஒரு பக்கம் உயர்ந்து வருகிறது.
ஏப்ரல் 12ஆம் தேதி ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 ரூபாய் . கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வெள்ளி கிலோவிற்கு 10,000 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. தற்போது கிராம் 90.50 ரூபாயாக உள்ளது. வங்கி சேமிப்பு, நிரந்தர வைப்பு, பரஸ்பர முதலீடு இதில் எல்லாம் பணம் போட்டிருந்தவர்கள் தங்கம் வாங்கி இருந்தால் குறுகிய காலத்திலேயே நல்ல வருமானத்தை எடுத்து இருக்கலாம் .
தொடர் விலை ஏற்றம் நீடிக்குமா என்பதை சர்வதேச காரணிகள் தான் நிர்மாணிக்கும். போர் பதற்றம் நீடிக்கும் சில நாடுகள் அதை தொடங்கினால் தங்கமும் வெள்ளியும் மேலும் கடுமையான விலையேற்றத்தை சந்திக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை