பயபுள்ள போதையில என்ன பண்ணியிருக்கு பாருங்க…..

பேச்சிலும், எழுத்திலும், கவி பாடுவதிலும் சிறந்தவர்கள், அக்கால புலவர்கள் மட்டுமல்ல, இக்காலப் புலவர்களும் இருக்கிறார்கள்.

அவர்கள் பாடிய கவிதை கருவூலங்களிலும், கருத்து மழையிலும், அறிவு ஊற்றிலும் சிலவற்றை இங்கே நினைவூட்டுவோம்.

அக்காலப் புலவர்களில் ஒருவர் பாடிய கவிதையை சற்று பார்ப்போம்.

தேனுகர் வண்டு மதுதனை யுண்டு
தியங்கியே கிடந்ததைக் கண்டு
தானதை சம்பு வின்கனி யென்று
தடங்கையால் எடுத்து முன் பார்த்தாள்.
வானுறு மதியம் வந்ததென் றெண்ணி
மலர்க் கரம் குவியும்மென் றஞ்சி
போனது வண்டோ பறந்ததோ பழந்தான்
புதுமையோ இதுவென புகன்றாள்….!

இதன் பொருள்

அது ஒரு தோப்பும் துறவும் கனிகளும் மலர்களும் சூழ்ந்த பசுமை நிறைந்த இடம்.நாவல் மரங்களில் இருந்து நாவல் பழங்கள் கொட்டிக் கிடக்கின்றன

அந்தப் பக்கமாக ஒரு அழகிய பெண் வருகிறாள்

மலர்கள் தோறும் சென்று தேனை உறிஞ்சி குடித்த வண்டு ஒன்றும், மதி மயக்கத்தில், அந்த நாவல் பழங்களிடையே விழுந்து கிடந்தது.அந்தப் பக்கம் வந்த அந்தப் பெண், சற்று பெரிதாக கிடக்கும் நாவல் பழத்தை குனிந்து எடுத்து பார்க்கிறாள்.

மலர் மதுவினை குடித்து மயக்கத்தில் கிடக்கும் வண்டு, தனது விழியை உயர்த்தி பார்க்கிறது.

அந்தப் பெண்ணின் உள்ளங்கை தாமரை மலர் போலவும், அவளது விரல்கள் தாமரை இதழ்கள் போலவும் அதற்குத் தெரிகிறது.

அந்தப் பெண்ணின் முகத்தை, வானத்தில் வரும் அழகிய நிலவு என்று எண்ணுகிறது.

உடனே, அந்த வண்டு நாம் தேன் உண்ட மயக்கத்தில் தாமரை மலரில் படுத்து கிடக்கிறோம்…

வானத்தில் வெண்ணிலவு தோன்றி விட்டது.
நிலவு வந்தால் தாமரை மலர் மூடிக்கொள்ளும்.

ஆகவே, உடனே தான் தப்பிக்க வேண்டும் என்று எண்ணி, பயந்து மது மயக்கத்தில் வண்டு பறந்து போகிறது.

உடனே, அந்த அழகிய பெண் வியப்பால் தாம் எடுத்தது

நாவல் பழமா..? அல்லது வண்டா…?
பழம் கூட பரந்து போகுமா….?
என்று வியந்து, இது என்ன புதுமையாக இருக்கிறதே….!
என்று கூறுகிறாள்.

இந்தப் பாடலைப் பாடிய கவிஞரின் கற்பனை வளத்தை அன்றும், இன்றும், என்றும் எண்ணி எண்ணி வியந்து போற்றலாம்…புகழலாம்… மகிழலாம்….

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்