நம்ம சேலத்துல கடல் கிடையாது. ஆனா கடலை விட அழகானதும், பலம் வாய்ந்ததுமான மேட்டூர் அணை நம்மகிட்ட இருக்கும்போது நமக்கு கடல் எதுக்கு?
கடல் போல் தண்ணீர், இரண்டு மலைகளுக்கிடையே காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட பிரம்மாண்டம், மேட்டூர் அணைக்கு தான் இந்த சிறப்பு.
சேலம் மாவட்ட எல்லையில் நகரப் பகுதியில் இருந்து சுமார் 51 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிற நம்ம மேட்டூர் அணை, தமிழ்நாட்டின் ஒரு சிறந்த அடையாளம்.
ஒரு சின்ன பேருந்து நிறுத்தம் கட்டறதுக்கு இந்த காலத்துல லட்சக்கணக்குல செலவாகிறப்ப, நம்ம மேட்டூர் அணையோட கட்டுமான செலவு எவ்வளவு தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க நான்கரை கோடி ரூபாய் தான் . ஆனா கட்டப்பட்ட வருஷம் 1925 லிருந்து 34 வரை அந்த காலகட்டத்தில் இது மிகப்பெரிய தொகை.
கர்ணல் WM எல்லீஸ் அவரோட வடிவமைப்பினால உருவான இந்த அணை அந்த காலகட்டத்தில் உலகிலேயே உயரமான நேர்கோட்டில் அமைந்த நீர்த்தேக்கம் அப்படின்ற பெருமையை அடைஞ்சிச்சி.
இன்னிக்கும் தமிழ்நாட்டுடைய 12 மாவட்டங்களில் இருக்கிற 16 லட்சம் ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமே நம்ம மேட்டூர் அணைதான். பாசன வசதி மட்டுமல்லாமல் பல மாவட்டங்களோட குடிநீர் தேவைக்கும் தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்கும் மேட்டூர் அணை உதவிடுது.
அணை திறக்கும் போது சுரங்க மின் நிலையம் மூலமாக 250 மெகா வாட்டும், கதவனை மின் நிலையம் மூலமாக 210 மெகா வாட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுது.
95 ஆயிரத்து 660 மில்லியன் கன அடி தண்ணீர நம்ம மேட்டூர் அணையில் தேக்கி வைக்க முடியும்.
மாவட்டத்தோட சுற்றுலாத்தலங்கள்ல ஒன்றான நம்ம மேட்டூர் அணைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை எப்போதுமே இருக்கும். பிரம்மாண்ட அணைய பார்த்து ரசிக்கிற பிள்ளைகளோட மகிழ்ச்சிய அதிகமாக்குற வகையில செயற்கை நீர்வீழ்ச்சி, பூங்கா இதெல்லாம் அனைத்து பக்கத்திலேயே இருக்குது.
இத பாக்குற நீங்க சேலத்துக்கு வெளியே இருக்கிறவராக இருந்தால் இப்பவே உங்களுக்கு மேட்டூர் அணையை பார்க்கணும்னு ஆசை வந்து இருக்கும். ஆனால் இப்போ வராதீங்க, ஏன்னா கோடைக்காலம்ன்றதால மேட்டூர் அணையில் தண்ணீர் ரொம்பவே குறைஞ்சிருக்கு. மேட்டூர் அணை பிரம்மாண்டம்தான் , ஆனா அதுல தண்ணி இருக்கும் போது அந்த பிரம்மாண்டம் பல மடங்கா இருக்கும்.
வருஷத்தோட சில நாட்கள் தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கிற நம்ம மேட்டூர் அணை, பல நாட்கள் தண்ணீர் குறைஞ்சும் வறண்டும் இருக்கறப்போ இத கடந்து போற உள்ளூர் வாசிக்கு நிச்சயம் கண்கள்ல கண்ணீர் எட்டிப் பார்க்கும்.
அடுத்த உலகப் போர் மூளும்ணா அது தண்ணிக்காக தான் அப்படின்னு சொல்லப்பட்டு வரும் நிலையில தண்ணீரை தேக்கி வைக்கிறதுக்காக கட்டப்பட்ட இந்த அணையில எப்பவுமே தண்ணீர் இல்லாத நிலை இருக்கக்கூடாது. அதுக்கு இயற்கையோட வரம் மட்டும் இல்லை, சில மனங்களோட மாற்றமும் முக்கியம்.