நாடு முழுவதிலும் முக்கிய நகரங்களில் 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காய்கறி சந்தைகள் அமைக்க மத்திய அரசு திட்டம்
இடைத்தரகர்கள் தலையீடு இன்றி விவசாயிகளிடம் இருந்து நேரடியாக மக்களுக்கு நியாயமான நிலையில் காய்கறிகள் கிடைக்கும் வகையில் 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட காய்கறி சந்தைகளை மத்திய அரசு அமைக்க உள்ளது.
அண்மையில் மத்திய நிதிநிலை அறிக்கையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகள், மற்றும் புத்தொழில் நிறுவனங்களுடன் இணைந்து காய்கறி சந்தைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி நாடு முழுவதிலும் முதற்கட்டமாக 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் 50 காய்கறி சந்தைகளை அமைப்பதற்கான வரைவு திட்டத்தை வேளாண் அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பின் திட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும். முக்கிய நகரங்களை ஒட்டி 50 கிலோமீட்டர் சுற்றளவு தொலைவிற்குள் குளிர் பதன கிடங்கு வசதியுடன் கூடியதாக இந்த சந்தைகள் அமைக்கப்படும். நுகர்வோர்கள் தங்கள் குடியிருப்பின் அருகே சில்லறை விற்பனையில் காய்கறிகளை வாங்கிக் கொள்ளலாம்.
இதன் மூலமாக காய்கறிகளின் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படுவதுடன், செயற்கை விலை ஏற்றமும் தவிர்க்கப்படும். முக்கியமாக விவசாயிகளுக்கு இடைத்தரகர்கள் இடையூறு இன்றி உரிய விலை கிடைக்க வழிவகை செய்யப்படும்.