வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி அப்பாவி இளைஞர்களை ஏமாற்றும் கும்பலை கூண்டோடு பிடிக்க ஏதுவாக வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கெங்கவல்லி செந்தாரப்பட்டியைச் சேர்ந்த அருண் என்பவர் நண்பர் மூலம் அறிமுகமாகிய ஏஜென்ட்கள் சையது, அப்துல் காதர் ஆகியோரிடம் லாவோஸ் நாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக ஒரு லட்சத்து 65 ஆயிரத்தை கொடுத்துள்ளார். லாவோஸ் சென்ற அருண், ஒரு வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார். தூதரகம் உதவியுடன் நாடு திரும்பியபின், தன்னை ஏமாற்றிய ஏஜென்ட்களை பிடித்து தம்மம்பட்டி போலீசாரிடம் அருண் ஒப்படைத்தார்.
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின் இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அருணைப் போல மேலும் பலரையும் இந்த கும்பல் பலரது உதவியுடன் ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது . அவர்கள் அனைவரையும் பிடிக்க ஏதுவாக வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி தமிழர் டிஜிபி சங்கர் ஜீவால் உத்தரவிட்டுள்ளார்.