நம்ம சேலத்துல இன்னும் இரு தினங்களுக்குப் பிறகு வெப்ப அலை வீசப்படும்னு வானிலை ஆய்வு மையம் தெரிவிச்சி இருக்கு. கத்திரி வெயில் வரத்துக்கு இன்னும் நாட்கள் இருக்கிறப்ப இது என்ன வெப்ப அலை? அது வந்தா என்ன நடக்கும்? ஏன் வருது? தற்காத்துக் கொள்ள வழிகள் என்ன? இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நம்ம சேலத்துல கடந்த சில தினங்களாகவே 40 டிகிரி வெயில் தொட்டுட்டு வருது . 100 முதல் 103 டிகிரி வரை பாரன்ஹீட் வெப்பம் நாள்தோறும் பதிவாகுது. இதனால பகல் நேரங்கள்ல நம்ம மாவட்டத்துல பெரும்பாலான இடங்கள் மக்கள் நடமாட்டம் இல்லாமலேயே இருக்கு.
மலைகளை ஒட்டியே நாம இருந்தாலும் கடுமையான வெயில் நம்மள வாட்டி வதைக்குது. இந்த வெயில் இன்னும் அதிகமாகும்னு வானிலை மையம் சொல்லுறது நமக்கெல்லாம் அச்சத்தை ஏற்படுத்தினாலும், அதிலிருந்து தற்காத்துக்கவும் வழிகள் இருக்கு. அது இயற்கைக்கு எதிரான வழிகளா இருக்கக் கூடாது
இந்திய வானிலை மையத்தால வரையறுக்கப்பட்ட அளவின்படி சமவெளிப் பகுதிகள்ல 40 டிகிரிக்கு மேலயும், மலைப்பிரதேசங்களில் 30° க்கு மேலயும், கடலோரப் பகுதிகள்ல 37 டிகிரிக்கு மேலயும் வெப்பநிலை உயர்றப்ப அது வெப்ப அலையா கருதப்படுது . இயல்பை விட மூன்று டிகிரிக்கும் அதிகமாக சுமார் மூன்று தினங்களுக்கு மேல் இருந்தாலே வெப்ப அலை ஏற்படும். நம்ம நாட்ட பொறுத்தவரைக்கும் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை வெப்பநிலை தாக்கம் குறித்த தகவல இந்திய வானிலை மையம் வெளியிட்டு வருது.
ஏன் இந்த வெப்ப அலை ஏற்படுது? இயற்கை வளங்கள் அழிப்புதான் முக்கிய காரணம் கடந்த 24 வருஷத்துல மட்டும் சுமார் 23 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான மரங்கள் நம்ம நாட்டுல அழிக்கப்பட்டிருக்கு. தனக்கு எதிரான இந்த செயலுக்கு இயற்கை நமக்கு கொடுத்துட்டு வர பதிலடிதான் இந்த வெப்ப அலை.
இயற்கைக்கு எதிரான செயல்கள் தொடர்ற வரைக்கும் ஆண்டாண்டு காலத்துக்கும் இந்த மாதிரியான கஷ்டங்களை நாம அனுபவிச்சாகணும்.
இதனால பாதிப்பு யார் யாருக்கு? குழந்தைகள், கர்ப்பிணிகள், வயசானவங்க, விவசாயம், கட்டுமான பணிகள்ல இருக்கிறவங்க, பகல் நேரத்துல வேலை விஷயமா வெளியில பயணம் மேற்கொள்ளறவங்க, காவல்துறையினர், அதிக வெப்பநிலையில் பணிபுரியற தொழிலாளர்கள், அனைத்து வாகன ஓட்டுனர்கள் , நாள்பட்ட வியாதியஸ்தருங்க எப்படி எல்லா தரப்பு மக்களும் வெப்ப அலையால பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கு.
தவிர்க்கறதுக்கு என்ன பண்ணனும்? முடிந்தவரை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில போறது தவிர்க்கணும். அரசு அறிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடித்து வரணும், பருத்தி ஆடைகளை அணியனும், வெளில போறப்ப தொப்பி, கண்ணாடி, குடைகளை பயன்படுத்தலாம், உடல்ல ஏற்படுற நீர் சத்து குறைபாட்ட போகிற வகையில் இயற்கை பானங்களை குடிக்கிறது , உப்பு சர்க்கரை கரைசல் குடிக்கிறது, இளநீர் இதையெல்லாம் பயன்படுத்தணும். வெப்ப காலத்துல ஏற்படுற உடல் பாதிப்புகளை மருத்துவர அணுகி உடனுக்குடன் சரி செஞ்சுக்கணும், நொறுக்கு தீனிகளை தவிர்க்கணும் , பகல் நேரங்கள்ல காப்பி தேநீர் குடிக்கிறது தவிர்க்கணும், குறிப்பா அடிக்கடி முகம் கழுவுவது, ஈரத்துணிகளை பயன்படுத்தி முகம் ,கை கால்களை, துடைச்சிக்கறது இப்படியான செயல்கள் மூலமா வெப்ப அலையினால வர பாதிப்புகள தவிர்க்கலாம்.
மக்களுக்கு மட்டும் இல்லை அரசுக்கும் சில வரைமுறைகள் வகுக்கப்பட்டிருக்கு. அதாவது மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு வருவத உறுதிப்படுத்துவது, குளிர்சாதன வசதிகள், உப்பு சர்க்கரை கரைசல் எப்போதும் இருப்பு வச்சிருக்கிறது, பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள் கிடைக்கிறத உறுதிப்படுத்துகிறது, வெப்ப அலை தொடர்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்ல விழிப்புணர்வு பதாகைகளை வெக்கிறது , நடமாடும் சுகாதாரக் குழுக்களை ஆங்கங்கே பணியமர்த்தறது, எந்த நேரமும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர தயாரா இருக்க வைக்கிறது, நம்மளையும் கடந்து கால்நடை மருத்துவமனைகளிலும் போதுமான அளவு மருந்துகளை இருப்பு வச்சு இருக்கிறத உறுதிப்படுத்துவது, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு போதுமான முன்னெச்சரிக்கை தரப்படுகிறவது இது போன்ற செயல்கள் அரசாங்க தரப்பில் செய்யப்படும்.
இந்த கடுமையான அனல் வீசிற சமயங்கள்ல நம்ம அரசாங்கத்தை எதற்கும் எதிர்பாராமல் வானிலை மையத்தோட அறிவிப்பை கேட்டு அவங்க சொல்லுறபடி நடந்தாலே வெப்ப அலை என்ன எந்தவிதமான அலை வந்தாலும் நாம தப்பிக்கலாம். நம்ம பாதுகாப்பு நம்ம கைல தான் இருக்கு