வளர்ச்சிப் பாதையில் இந்தியா வீறு நடை போட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையாக தெரிவித்துள்ளார்
இந்தியாவை பாதுகாக்க வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்காக பலர் உழைத்து வருகிறார்கள் என பாரத பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 2047 இல் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும் என்றும் அவர் உறுதிப்பட கூறியுள்ளார்.
பாரதத்திருநாட்டின் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி வெள்ளமென திரண்டு இருந்த மக்களிடையே உரையாற்றினார்.
வல்லரசு நாடாக மாற உள்நாட்டு உற்பத்தியில் சிறந்து விளங்க வேண்டும் என்றும் அதனை எட்டி உலக அளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற புகழை இந்தியா விரைவில் அடையும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இதன் மூலம் இந்தியா 2047ல் வளர்ச்சியடைந்த நாடாக மாறும் என்றும் உறுதிபடக் கூறினார்.
பேரிடர் காலங்களில் உறவுகளை இழந்தவர்களுக்கு தேசம் துணை நிற்கும் என்றும் எத்தனை பேரிடர்கள் வந்தாலும் அவற்றிலிருந்து நாம் மீண்டு வருவோம் எனவும் பிரதமர் கூறினார்.
நாட்டிற்காகவும் நமது சுதந்திரத்திற்காகவும் உயிர்த்தியாகம் செய்தவர்களை போற்றி வணக்கம் செலுத்தும் புனித நாளான இன்று அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.