பரவி வரும் சிக்கன் குனியா ….. மக்கள் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத்துறை வேண்டுகோள்
கொசுக்கள் மூலம் டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல், மர்ம காய்ச்சல் என பலவகை காய்ச்சல்கள் இருந்தாலும் சிக்கன்குனியா காய்ச்சல் வந்தவர்களுக்கு பாதிப்பு மிகவும் அதிகம் . ஏ டி எஸ் வகை கொசுக்கள் கடிப்பதால் வரும் சிக்கன்குனியா காய்ச்சலினால் கடுமையான காய்ச்சல் மற்றும் தலைவலி, உடல் வலி ,மூட்டு வலி, வயிற்று வலி ,தொடர் வாந்தி ,உடல் சோர்வு இவையே இதன் அறிகுறிகள். சிலருக்கு உடலில் அரிப்பு , சிவப்பு புள்ளிகள் தோன்றுதல் இவையும் ஏற்படும்.
காய்ச்சலின் தீவிரம் அதிகமானால் உடலின் உட்பகுதியில் ரத்தக்கசிவு ஏற்படும். ரத்தத்தின் தட்டை அணுக்கள் குறைந்து உயிருக்கு ஆபத்தாகி விடும் எனவே காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என சுகாதார த்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிக்கன் குனியா காய்ச்சல் பரவி வருவதாகவும் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 1451 பேருக்கு அறிகுறி இருந்ததாகவும், அதில் 331 பேருக்கு அது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பாதிப்பு அதிகம் இருந்தாலும், பாதிக்கப்பட்ட அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.