கடந்த இரண்டு மாதங்களாகவே நியாய விலைக் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயிலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெளிச்சந்தைகளில் இவை அதிகம் விலைக்கு விற்கப்படும் நிலையில் நியாய விலைக் கடைகளை நம்பியே நடுத்தர மக்களும் அடித்தட்டு மக்களும் இருக்கின்றனர்.
தமிழக அரசு அதிகாரிகளின் மோசமான செயல்பாட்டினால் மக்களவை தேர்தலுக்கு பிறகு நியாய விலை கடைகளில் பருப்பு பாமாயில் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கு 40,000 டன் பருப்பு மற்றும் நான்கு கோடி லிட்டர் பாமாயில் விநியோகம் செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டது. அவற்றை வாங்குவதற்கு நிதித்துறை இதுவரை ஒப்புதல் தரவில்லை. இதனால் கொள்முதலில் தாமதம் ஏற்பட்டுள்ளதுடன், டெண்டர் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவும் இயலவில்லை. இந்த நிலை மேலும் நீடிக்கும் பட்சத்தில் ஆகஸ்ட் மாதமும் நியாய விலை கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் கிடைப்பதில் மிகவும் சிரமம் ஏற்படும் என்று கூறப்படுகிறது . இந்த தகவல் நியாய விலை கடையை நம்பியுள்ள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு துரித கதியில் நடவடிக்கை எடுத்து ஆகஸ்ட் மாதம் நியாய விலை கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றர்.