நாமக்கல் மண்டலத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினமும் முட்டையின் பண்ணை கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து வருகிறது. கடந்த 4ம் தேதி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 470 காசாக இருந்தது. இந்த விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. இந்த நிலையில் நேற்று, என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ், முட்டை விலையில் மேலும் 10 காசுகள் உயர்த்தினார். இதையடுத்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ₹5ஆக நிர் ணயம் செய்யப்பட்டது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.