கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் படுகொலையை கண்டித்து நாடு முழுவதிலும் இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளில் எந்த தடையும் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், படுகொலையை கண்டித்தும், மருத்துவமனைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும், நாடு முழுவதிலும் இன்று காலை 6:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை 24 மணி நேரத்திற்கு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சைகள் மற்றும் அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள் இந்த நேரத்தில் மேற்கொள்ளப்படாது எனினும் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தாக்கப்பட்டால் ஆறு மணி நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அதற்கு மருத்துவ நிறுவன தலைவரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த சூழலில் விமான நிலையங்களை போலவே நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளையும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் மருத்துவர்கள் அச்சமின்றி பணியாற்ற முடியும் என்றும் இந்திய மருத்துவ கழகம் வலியுறுத்தியுள்ளது.