உலகின் மிகப்பெரிய உயரமான முருகன் சிலை…நம்ம சேலத்தில்
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உலகின் மிக உயரமான முருகன் சிலை அமைந்துள்ளது.
சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஈத்தாப்பூரில் உள்ள ஸ்ரீ முத்துமாலை முருகன் திருக்கோவிலில் அமைந்துள்ள இந்த திருவுருவச் சிலை 146 அடி உயரம் உள்ளது.
2016ஆம் ஆண்டு துவங்கிய இப்பணி 2022ஆம் ஆண்டு முடிவடைந்து உள்ளது. மலேசியாவில் உள்ள முருகன் கோயிலை வடிவமைத்த தியாகராஜ ஸ்தபதி மூலம் ஆறு ஆண்டுகள் இந்த திருப்பணி நடைபெற்று உள்ளது.
தமிழகத்தில் உள்ள மிகவும் புகழ் பெற்ற முருகனின் திருப்பரங்குன்றம் பழமுதிர்ச்சோலை, திருத்தணி, சுவாமிமலை, பழனி போன்ற திருக்கோயில் மண்ணை கலசத்தில் வைத்து ஒரே நேரத்தில் பூஜை செய்து இந்த திருக்கோயிலை வடிவமைத்து உள்ளனர்.
இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மடாதிபதிகள் தருமாபுர ஆதீனம், பேரூர் ஆதினம் ரத்தனகிரி சாமிகள், மலேசியாவிலிருந்து பாலகிரிசாமி ஆகிய நான்கு மாடாதிபதிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் 142அடி உள்ள முருகன் சிலைதான் (கோலாலம்பூரில் உள்ள பத்து குகைகளுக்கு அருகில்) உலகிலேயே மிக உயரமானதாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது சேலம் மாவட்டத்தில் அமைந்ததுள்ள 146அடி உயரமுள்ள முத்துமலை முருகன் சிலைதான் உலகின் மிக உயரமான முருகன் சிலையாக கருதப்படுகிறது.
சுமார் 3 கோடி ரூபாய் செலவில், சிரித்த முகத்துடன், வலது கை ஆசீர்வதிப்பது போன்றும், இடது கையில் வேலை பிடித்தும் மணிமகுடம் சூடிய நிலையில் ஆடை அணிகலன்களுடன் நின்ற கோலத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முருகனின் திருமேனியில் தங்கக் கவசம் சாற்றி உள்ளனர்.
சிலையின் அருகிலேயே ஒரு லிஃப்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் மேலேறி வந்து முருகன் கையில் உள்ள வேலுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்யலாம். ஒரே நேரத்தில் 5 லட்சம் பேர் 146அடி உயர முருகனை தரிசனம் செய்யலாம்.வாங்க…..
ஒரு எட்டு போய் முருகனை பார்த்துட்டு நல்ல வரத்த வாங்கிட்டு வந்திருவோம்….