தமிழ்நாட்டிற்கு என்ன கிடைத்தது..?

கூட்டணிகளை மத்திய அரசு அமைத்ததில் திமுக, அதிமுக பங்கு என்ன? கூட்டணி ஆட்சி நீடித்தால் தமிழகத்திற்கு நன்மை கிடைக்குமா?

இந்தியாவில் மாநிலக் கட்சிகளின் உதவியுடன் அமையும் மத்திய அரசுகள் வலுவானதாக இருப்பதில்லை எனச் சொல்லப்படுவதுண்டு. ஆனால், கடந்த காலங்களை திரும்பிப் பார்த்தால், தேசியக் கட்சிகள் வெளியே இருந்து ஆதரிக்கும் அரசுகளைவிட, மாநிலக் கட்சிகள் பங்கேற்கும் அரசுகள் முழுக்காலத்தை நிறைவு செய்திருக்கின்றன.

இந்தியாவின் சுதந்திரத்தைத் தொடர்ந்த ஆண்டுகளில், அரசியலில் இந்திய தேசிய காங்கிரசின் ஆதிக்கம் மிக வலுவாக இருந்தது. முதல் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்ட போது நாடு முழுவதும் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியே ஆட்சியைப் பிடித்தது. மத்தியிலும் காங்கிரஸ் கட்சிக்கே அதிக இடங்கள் கிடைத்தன.

1967 வரை இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய நிலையில், அந்த ஆண்டு நடந்த தேர்தலில், பல இடங்களில் மாநிலக் கட்சிகள் தடம் பதிக்க ஆரம்பித்தன. இருந்தபோதும் தேசிய அளவில் காங்கிரசின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்தது. மத்தியில் ஆட்சி அமைக்க மாநிலக் கட்சிகளின் ஆதரவு காங்கிரசுக்கு தேவைப்படவில்லை.

ஆனால், 1969ல் குடியரசுத் தலைவர் தேர்தலின்போது முதல் முறையாக இந்த நிலை மாறியது. அப்போது இந்திய தேசிய காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் – சிண்டிகேட் என பிளவுபட்ட தருணத்தில், இந்திரா காங்கிரசின் ஆட்சி தொடர அப்போது நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் வி.வி. கிரி வெற்றிபெறுவது முக்கியமானதாக இருந்தது. அந்த சூழலில், தனது 25 எம்.பிக்களை வாக்களிக்கச் செய்து, இந்திரா காந்தியின் ஆட்சியைக் காப்பாற்றியது தி.மு.கதான்.

1977ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சிகள் முதல்முறையாக மத்திய அரசில் பங்கேற்கும் நிலை ஏற்பட்டது. அந்தத் தேர்தலில் தேசிய அளவில் ஜனதா கட்சி 295 இடங்களையும் காங்கிரஸ் கட்சி 154 இடங்களையும் பிடித்தன. ஜனதா கட்சி தலைமையில் ஆட்சி அமைந்தது. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.கவும் இந்திரா காங்கிரசும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.

அப்போது அமைந்த மொரார்ஜி தேசாய் அரசில் தமிழ்நாட்டில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை. ஆனால், மொரார்ஜி தேசாய் அரசு கவிழ்ந்து, சரண் சிங் தலைமையில் புதிய அரசு அமைந்தபோது, அதில் தமிழ்நாட்டில் இருந்து அ.தி.மு.க. பங்கேற்றது.

தமிழ்நாட்டில் மாநிலக் கட்சிகளின் சார்பில், முதன் முதலில் மத்திய அமைச்சரவையில் பங்கேற்றது இந்த அரசில்தான்.

ஆனால், வெகு விரைவிலேயே காங்கிரஸ் கட்சி தனது ஆதரவைத் திரும்பப் பெற்றதால், இந்த அரசு 1979 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 20 வரை சுமார் ஒரு மாதமே நீடித்தது.

இதற்கு அடுத்த கூட்டணி ஆட்சி, 1989ல்தான் அமைந்தது. இந்தக் கூட்டணியில் பங்கேற்றிருந்த தி.மு.க., தேர்தலுக்குப் பிறகு பங்களித்ததைவிட, இந்தத் தேர்தலுக்கு முன்பாக செய்த பணிகள் கவனிக்கத்தக்கதாக இருந்தன.

80களின் பிற்பகுதியில் காங்கிரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் தேசிய முன்னணி என்ற கூட்டணி உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என்.டி. ராமாராவும் ஒருங்கிணைப்பாளராக வி.பி. சிங்கும் இடம்பெற்றிருந்தனர். இந்த முன்னணியில் ஜனதா தளம், லோக் தளம், காங்கிரஸ் எஸ், அசாம் கண பரிஷத், தெலுங்கு தேசம், தி.மு.க., ஜன் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன.

தேசிய முன்னணியின் முதல் கூட்டத்தை தமிழ்நாட்டில்தான் நடத்த வேண்டும் என்ற தி.மு.கவின் கோரிக்கையையும் தேசிய முன்னணி ஏற்றுக்கொண்டது. அதன்படி, முதல் கூட்டம் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.

அந்த விழாவில் பேசிய தேசிய முன்னணியின் தலைவர் என்.டி. ராமாராவ், வரும் காலங்களில் தமிழக கட்சிகள் எதிர்கால அரசில் எவ்வித பங்காற்றும் என்பதற்கு கட்டியம் கூறுவதைப் போல பேசினார்.

தி.மு.க. இல்லாவிட்டால் மாநிலக் கட்சிகளுக்கு அவற்றுக்கான இடம் கிடைத்திருக்காது. தேசத்தைக் கட்டமைப்பதிலும் மக்களுக்கு நெருக்கமான ஒரு அரசுக்கான லட்சியத்தைத் தருவதிலும் அக்கட்சியின் முக்கியப் பங்களிப்பு இது என்றார் அவர்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது தேசிய அளவில் காங்கிரஸ் 197 தொகுதிகளை மட்டுமே பிடித்திருந்தது. ஜனதா தளம் 143 இடங்களிலும் பா.ஜ.க. 85 இடங்களிலும் சி.பி.எம். 33 இடங்களிலும் சி.பி.ஐ. 12 இடங்களிலும் வெற்றிபெற்றிருந்தன. 13 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருந்த தி.மு.கவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி பெரும் தோல்வியைச் சந்தித்திருந்தது. அந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் நாகப்பட்டினம் தொகுதியில் வெற்றிபெற்றிருந்தது.

தேர்தலுக்குப் பிறகு தேசிய முன்னணி ஆட்சி அமைந்த போது, அமைச்சரவையில் கட்சி வாரியாக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது. தேசிய முன்னணியில் முக்கியப் பங்கு வகித்த தி.மு.க., நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்திலும் வெற்றிபெறவில்லை. இருந்த போதும், அக்கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவியைத் தர விரும்பினார் வி.பி. சிங். ஆகவே, மாநிலங்களவை உறுப்பினராக இருந்த முரசொலி மாறனுக்கு நகர்ப்புறத் துறையின் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தி.மு.கவை அரசில் இணைத்துக் கொள்வதால், கூடுதல் பலம் ஏதும் கிடைக்காது என்ற நிலையிலும்கூட அக்கட்சியை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள விரும்பினார் வி.பி. சிங்.

வி.பி. சிங் அரசு கவிழ்ந்து, சந்திரசேகர் ஆட்சியமைத்த போது அந்த அரசுக்கு காங்கிரசுடன் சேர்ந்து அ.தி.மு.கவும் ஆதரவு அளித்தது. ஆனால், அரசில் அ.தி.மு.க. இடம்பெறவில்லை.

ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பிறகு 1991ல் நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அந்த அரசுக்கு பெரும்பான்மை இல்லை. காங்கிரசுக்கு 232 இடங்கள் மட்டுமே கிடைத்திருந்தன. அப்போது, அ.தி.மு.க. வெளியில் இருந்து அந்த அரசுக்கு ஆதரவளித்தது.

1996ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் 20 இடங்களையும் தி.மு.க. 17 இடங்களையும் சிபிஐ இரண்டு இடங்களையும் பிடித்தன. தேசிய அளவில் பாஜக 161 இடங்களைப் பிடித்தது. காங்கிரஸ் 140 இடங்களையே பிடித்தது. தனிப்பெருங்கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் அழைக்க, வாஜ்பேயி பிரதமராக பதவியேற்றார். அந்த அரசு 13 நாட்களில் கவிழ்ந்தது. இதற்குப் பிறகு 1996ஆம் ஆணடு ஜூன் மாதம் ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தேவே கௌடா பிரதமராக பதவியேற்றார். இந்த அமைச்சரவையில்தான் முதன் முதலாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் இடம் பெற்றனர்.

அடுத்ததாக தேவே கௌடாவின் ஆட்சி கவிழ்ந்து ஐ.கே.குஜ்ரால் பிரதமரானபோது, முன்னர் பொறுப்பிலிருந்த அதே அமைச்சர்கள் அந்த அமைச்சரவையில் இடம்பெற்றனர்.

1998ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அ.தி.மு.க. 18 இடங்களையும் பா.ஜ.க. 3 இடங்களையும் பிடித்தன. தி.மு.க. 5 இடங்ளையும் த.மா.கா. 3 இடங்களையும் பெற்றன. தேசிய அளவில் 182 இடங்களை பா.ஜ.கவும் 141 இடங்களை காங்கிரசும் பிடித்திருந்தன. இந்த முறை ஆட்சியமைக்க வாஜ்பேயியை அழைத்தபோது, அவருக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் ஆதரவுக் கடிதத்தைக் கொடுக்க வேண்டும் என்றார் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன்.

அ.தி.மு.க. அந்தக் கடிதத்தை அளிக்க விரும்பவில்லை. அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்க விரும்பியது. ஆனால், ஜஸ்வந்த் சிங் சென்னைக்கு வந்து பேசிய பிறகு ஆதரவுக் கடிதத்தை அளித்தார் ஜெயலலிதா. ஆதரவுக் கடிதத்தை அளித்த ம.தி.மு.க.வும் மத்திய அரசில் பங்கேற்க மறுத்துவிட்டது.

ஆனால், கூட்டணிக்குள் பல முரண்பாடுகள் தொடர்ந்து கொண்டேயிருந்தன. மதுரையிலிருந்து வெற்றிபெற்றிருந்த ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு அமைச்சர் பதவி தர வேண்டுமென ஜெயலலிதா கோரியதாக செய்திகள் வெளியாயின. அதேபோல, அமைச்சரவையில் வாழப்பாடி ராமமூர்த்திக்கு தரப்பட்ட இலாகா தொடர்பாகவும் அதிருப்தி நீடித்தது. மேலும் சட்டம் – ஒழுங்கை காரணம் காட்டி தி.மு.க. அரசை கலைக்க வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தியதாகவும் செய்திகள் வெளியாயின. இரு தரப்புக்கும் இடையில் முரண்பாடுகள் உருவாவது வெளிப்படையாகத் தெரிந்தது.

அதிருப்தியில் இருந்த ஜெயலலிதாவைச் சந்திக்க ஜார்ஜ் பெர்ணாண்டஸ் போன்ற மூத்த அமைச்சர்கள் அடிக்கடி வந்து சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

இந்த நிலையில், மிகக் கடுமையான ஒரு நெருக்கடியைக் கொடுத்தார் ஜெயலலிதா. அதாவது, ஜார்க்கண்ட் எம்.பிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் சிக்கிய பூட்டா சிங், இரண்டரைக் கோடி ரூபாய் ஊழல் வழக்கில் சிக்கிய ராமகிருஷ்ண ஹெக்டே, வெளிநாட்டிலிருந்து இரண்டு லட்சம் அமெரிக்க டாலரை சட்டவிரோதமாக வாங்கியதாக சர்ச்சையில் சிக்கிய ராம் ஜெத்மலானி ஆகியோரை அமைச்சர் பதவியிலிருந்தே நீக்க வேண்டும் என்றார். ராமகிருஷ்ண ஹெக்டேவும் ராம் ஜெத்மலானியும் ஜெயலலிதாவைக் கடுமையாக எதிர்த்தனர்.

ஜெயலலிதாவைச் சமாதானப்படுத்த பூட்டா சிங்கை நீக்கிய வாஜ்பேயி, ஹெக்டேவையும் ராம் ஜெத்மலானியையும் நீக்குவதற்குத் தயாராக இல்லை. தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியைப் பொருத்தவரை, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு எப்படியிருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக அதிகாரிகள் குழு ஒன்று தமிழ்நாட்டிற்கு வந்தது. ஆனால், அந்த அதிகாரிகள் குழுவின் அறிக்கை தி.மு.க. அரசுக்கு சாதகமாகவே இருந்தது.

ஆனாலும் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டமும் தீவிரவாதமும் தேசரோத செயல்களும் பெருகிவிட்டதால் தி.மு.க. அரசை கலைக்க வேண்டுமென வலியுறுத்தினார் ஜெயலலிதா. இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அத்வானி, எந்த மாநில அரசையும் 356வது பிரிவை பயன்படுத்தி கலைக்க முடியாது என்றார்.

இது ஜெயலலிதாவை ஆத்திரப்படுத்தியது. தேசியப் பாதுகாப்பில் அக்கறையில்லாத ஒருவர் உள்துறை அமைச்சராக இருப்பதற்கு வேதனைப்படுகிறேன். பல பிரச்னைகளை மனதில் வைத்திருக்கும் பா.ஜ.க. தலைவர்கள் குறிப்பிட்ட சில விஷயங்களில் மட்டும் நினைவிழப்பால்(செலக்டிவ் அம்னீஷியா) பாதிக்கப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றார்.

இதற்குப் பிறகு அடுத்த விவகாரத்தை கையில் எடுத்தார். இந்தியக் கடற்படை தளபதியாக இருந்த விஷ்ணு பகவத்தை பதவிநீக்கம் செய்திருந்தது மத்திய அரசு. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஜெயலலிதா, அட்மிரல் விஷ்ணு பகவத்தை மத்திய அரசு அணுகிய விதம் ஏற்கத்தக்கதல்ல, அவரது பதவி நீக்கம் தொடர்பாக விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் ஜார்ஜ் பெர்ணாண்டஸை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறினார் ஜெயலலிதா.

இதனை ஏற்க வாஜ்பேயி தயாராக இல்லை. உடனடியாக அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் அதிமுக அமைச்சர்கள் கலந்துகொள்ளவில்லை. ஜெயலலிதாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதற்குப் பிறகு மத்திய அரசு மீதான ஜெயலலிதாவின் விமர்சனங்கள் தீவிரமடைந்தன.

இந்த நிலையில், தில்லியில் தேநீர் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. 1999 மார்ச் 29ஆம் தேதி அந்த தேநீர் விருந்து நடைபெற்றது. இதில் நரசிம்மராவ், சந்திரசேகர், தேவேகௌட, டாக்டர் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விருந்தில் மிக முக்கியமான தலைவர் ஒருவரும் கலந்துகொண்டார். அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. அந்தத் தேநீர் விருந்தில் சோனியா காந்தியும் ஜெயலலிதாவும் அருகருகே அமர்ந்து சில நிமிடங்கள் பேசிக்கொண்டனர்.

இதற்குப் பிறகு அதிமுகவின் அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி குடியரசுத் தலைவரைச் சந்தித்த ஜெயலலிதா மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

இதனால், வேறு கட்சிகளின் ஆதரவைப் பெற முயன்றது பா.ஜ.க. தமிழ்நாட்டில் தி.மு.க. அந்த அரசுக்கு ஆதரவளிக்க முன்வந்தது. இருந்தபோதும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பேயி அரசு கவிழ்ந்தது. இதற்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியமைக்க அ.தி.மு.க. ஆதரவளித்தது. ஆனால், அந்த ஆட்சி அமையவில்லை. இதையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

1999ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.கவும் தி.மு.கவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அதிமுக காங்கிரசுடன் இணைந்து போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் தேசிய அளவில் பா.ஜ.க. 182 இடங்களைப் பிடித்தது.

1999 அக்டோபர் 13ஆம் தேதி பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டார் வாஜ்பேயி.

2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிகள் அப்படியே மாறின. தமிழ்நாட்டில் காங்கிரஸ் – தி.மு.க. – பா.ம.க. – மதிமுக கூட்டணி உருவானது. அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 215 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது. காங்கிரஸ் 145 இடங்களையும் தி.மு.க. 16 இடங்களையும் பிடித்தன. பா.ஜ.க. கூட்டணியில் பா.ஜ.கவுக்கு 138 இடங்களும் பிஜு ஜனதா தளத்திற்கு 11 இடங்களும் கிடைத்திருந்தன. தமிழ்நாட்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 100 சதவீத வெற்றி கிடைத்திருந்தது. தமிழ்நாடு – புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் அந்தக் கூட்டணி கைப்பற்றியிருந்தது. அதிமுக – பா.ஜ.க. கூட்டணி படுதோல்வி அடைந்திருந்தது. இடதுசாரிகளும் மதிமுகவும் வெளியில் இருந்து ஆதரவு அளிக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியமைத்தது.

மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் 28 கேபினட் அமைச்சர்கள் இடம்பெற்றனர். அதில் தி.மு.கவுக்கு 3 இடங்களும் பா.ம.கவுக்கு ஒரு இடமும் அளிக்கப்பட்டது. இணையமைச்சர்களில் தி.மு.கவுக்கு நான்கு பேரும் பா.ம.கவுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தது. தி.மு.க. 17 இடங்களிலும் காங்கிரஸ் 8 இடங்களிலும் விசிக, ஐயுஎம்எல் ஆகியவை தலா ஒரு இடத்திலும் வெற்றிபெற்றன. தேசிய அளவில் காங்கிரஸ் 206 இடங்களைப் பிடித்தது. ஆகவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி தொடர்ந்தது.

2014ஆம் ஆண்டிலிருந்து தமிழக அரசியல் கட்சிகள் பங்கேற்கும் அரசு மத்தியில் அமையவில்லை. ஆனால், 90களிலும் புத்தாயிரத்தின் முதல் தசாப்தத்திலும் மத்திய அரசு நீடிப்பதில் தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது.

கூட்டணி முறையில் அமையும் அரசு உறுதியாக இருக்காது, விரைவிலேயே கவிழ்ந்துவிடும் என்பதுதான் இந்திய அரசியலில் பொதுவான கணிப்பு. தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சிகள், இந்தக் கூற்றைப் பொய்யாக்கியிருக்கின்றன. மாறாக, தேசிய கட்சிகளின் ஆதரவுடன் அமையும் அரசுகள்தான் நீண்ட நாட்கள் நீடித்ததில்லை.

1979ல் அமைந்த சௌத்ரி சரண் சிங் அரசிற்கும் 1991ல் அமைந்த நரசிம்மராவ் தலைமையிலான மைனாரிட்டி காங்கிரஸ் அரசிற்கும் அ.தி.மு.க. வெளியிலிருந்து ஆதரவளித்தது இங்கு நினைவுகூறத்தக்கது.

பா.ஜ.க. தலைமையிலான அரசு முதல் முறையாக முழுமையாக தனது ஆட்சிக்காலத்தை நிறைவுசெய்தது, தமிழ்நாட்டைச் சேர்ந்த கூட்டணிக் கட்சிகளின் உதவியால்தான் என்பதை மறந்துவிடக்கூடாது.

மாறாக, 1979ல் காங்கிரஸ் ஆதரவில் அமைந்த சரண் சிங் அரசு, 1989ல் பா.ஜ.க. ஆதரவில் அமைந்த வி.பி. சிங் அரசு, 1990ல் காங்கிரஸ் ஆதரவில் அமைந்த சந்திரசேகர் அரசு, 1997ல் காங்கிரஸ் ஆதரவில் அமைந்த ஐ.கே. குஜ்ரால் தலைமையிலான அரசு ஆகியவை, தேசிய கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதாலேயே கவிழ்ந்தன.

1998ல் பா.ஜ.க. அரசுக்கு அளித்துவந்த ஆதரவை, அ.தி.மு.க. திரும்பப் பெற்றதால் மத்திய அரசு கவிழ்ந்தது. அந்த ஒரு தருணத்தைத் தவிர, மத்திய அரசு கவிழ்வதற்கு தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள் காரணமாக இருந்ததில்லை.

தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் ஆட்சி அமைக்கும் கூட்டணியில் இடம்பெறுவது குறித்த மன முதிர்ச்சி கடந்த சில தசாப்தங்களில் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இது எல்லாமே மாநிலத்தில் தங்கள் அரசியல் நலனுக்கு ஒத்துப் போகும்போது மட்டும்தான் நடக்கும். மாநிலத்தில் தங்கள் நலனைக் காவுகொடுத்துவிட்டு, மத்திய கூட்டணியில் தமிழக அரசியல் கட்சிகள் இருக்க விரும்பாது.

இதுபோல, மத்திய அரசில் மாநிலக் கட்சிகள் பங்கேற்பதால் அந்தந்த மாநிலங்களுக்கு என்ன நன்மை கிடைக்கிறது?

தற்போது ஒரு சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றி அனுப்பினால், அதனை ஆளுநர் நிறுத்திவைக்கிறார். மத்தியில் ஒரு இணக்கமான அரசு இருக்கும்போது அப்படி நடக்காது. மத்தியில், மாநிலக் கட்சிகள் பங்கேற்கும் அரசு இருக்கும்போது முரண்படக் கூடிய வகையிலான ஆளுநரை நியமிக்க மாட்டார்கள். ஆளுநர் மட்டுமல்ல, மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதி நியமனம் ஆகியவற்றிலும் மாநிலக் கட்சிகள் செல்வாக்கு செலுத்த முடியும். மத்திய அமைச்சர் பதவியைவிட, மாநிலக் கட்சிகளுக்கு இதுதான் முக்கியமானது.

90களின் பிற்பகுதியிலிருந்து 2014 வரை மத்திய அரசில் மிகப் பெரிய செல்வாக்கைச் செலுத்திய தமிழ்நாடு அதற்குப் பிறகு, கடந்த பத்தாண்டுகளில் விலகியே இருக்க வேண்டியிருந்தது.

தற்போது நடந்து முடிந்திருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், இந்த முறையும் தேசியக் கட்சியான பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை கிடைக்குமென்றே சொல்கின்றன. அப்படி நடக்கும் பட்சத்தில், மூன்றாவதாக ஒரு ஐந்தாண்டுகளுக்கு தமிழக அரசியல் கட்சிகள் மத்திய ஆட்சியிலிருந்து விலகியிருக்க வேண்டியிருக்கும்.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்