குப்பைகளால் மாசாகும் ஆறு
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், முன்னோடியாகவும் இருக்க வேண்டிய நிர்வாகங்கள் அவர்களை விட மோசமாக நடந்து கொண்டால்? ஓமலூர் பேரூராட்சியில் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. ஆற்றை மாசுபடுத்தும் அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்குதான் இந்த பதிவில் நாம் காண இருப்பது .
ஓமலூரில் உள்ள 15 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் நேரு நகர் பகுதியில் உள்ள பேரூராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு தரம் பிரித்து மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. தற்போது அங்கு சுகாதாரப் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அருகில் உள்ள சரபங்கா ஆற்றின் கரையோரம் குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் கொட்டி வருகிறது. மலை போல குவிந்துள்ள குப்பைகள் சரபங்கா நீர் வழிப்பாதை முழுவதையும் ஆக்கிரமித்துள்ளது.
தற்போது மழை பெய்து வருவதால் குப்பைகள் ஆற்றால் அடித்துச் செல்லப்படுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் டெங்கு மலேரியா உள்ளிட்ட நோய் பரவும் வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளன.
சேலத்தை சுற்றியுள்ள மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ள நிலையில் இது போன்ற அலட்சியப் போக்கால் சேலம் மாவட்டத்திலும் டெங்கு பரவி விடுமோ என்று அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகள் களத்தில் இறங்கி குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். மழை தீவிரமடைவதற்குள் சரபங்கா ஆற்றினை சுத்தப்படுத்தி குப்பைகள் கொட்டுவதையும் முறைப்படுத்தி சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் பேரூராட்சி நிர்வாகம் செயல்பட வேண்டும் என்பதே ஓமலூர் மக்களின் எதிர்பார்ப்பு.