தடை செய்யப்பட்ட மீன்கள் ஏரியில் கிடைத்ததால் அதிர்ச்சி…

சேலம் போடிநாயக்கன்பட்டி ஏரியில் அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் சிக்கியதால் பொதுமக்களும் மீன்வளத்துறை அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் . இந்த மீன்கள் அங்கு எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

போடிநாயக்கன்பட்டி ஏரி மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அண்மைக்காலமாக சேலம் மாநகரிலிருந்து வெளியேறும் கழிவுகளும், குப்பை கழிவுகளும் ஏரியில் தேங்குவதால் ஏரி மாசடைந்துள்ளது. இதனால் ஏரியை தூர்வாரி அழகு படுத்தும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

ஏரியில் உள்ள நீரை வெளியேற்றி குப்பைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ஏரியில் மீன்களைப் பிடிக்க அப்பகுதி மக்கள் குவிந்தனர். மீன்களுக்காக வலை வீசியபோது மத்திய மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் பெருமளவில் சிக்கியது. ஐந்து கிலோ முதல் 20 கிலோ வரையிலான மீன்கள் கிடைத்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மீன்வளத்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டதில் தண்ணீர் வற்றிய சகதி பகுதியில் அதிக அளவு மீன்கள் இருந்தது தெரிய வந்தது.

தடை செய்யப்பட்ட மீன்களை அந்த ஏரியில் யாரேனும் வளர்க்கிறார்களா? அல்லது வேறு வகையில் எப்படி இந்த வகை மீன்கள் ஏரிக்கு வந்தது என்பது பற்றி விசாரித்து வருகின்றனர். ஏரி நீரை முழுவதுமாக வற்ற வைத்தால் தான் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை முற்றிலும் அகற்ற முடியும் .

கழிவுநீர் ரசாயன நீர் உள்ளிட்டவற்றில் வளரும் கண்மை வாய்ந்த ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள், இடைவிடாது மற்ற மீன்களை உண்ணும் தன்மை கொண்டவை. நீர்நிலைகளில் இவைகள் நுழைந்து விட்டால் அழிப்பது கடினம் .

நன்னீர் மீன்கள் மற்றும் அவற்றின் முட்டைகளை இவை தின்று விடுவதால் பாரம்பரிய மீன்கள் அழியும் நிலை ஏற்படும்.

இந்த வகை மீன்களில் உள்ள ஈயம், அலுமினியம் , இரும்பு உள்ளிட்டவையால் இதனை உண்போருக்கு தோல் வியாதிகளும், ஒவ்வாமையும், அதிகபட்சமாக புற்றுநோய் வரையிலும் வர வாய்ப்பு உண்டு.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்