கோலாகலமாக தொடங்கும் ஏற்காடு கோடை விழா – சவாலை சமாளிக்குமா மாவட்ட நிர்வாகம்..?

பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே ஆண்டுதோறும் நபத்தப்படுகின்ற ஏற்காடு கோடைவிழா இன்று தொடங்குகிறது. கடுமையான மழை , ஈ பாஸ் பிரச்சனை என ஊட்டி கொடைக்கானலுக்கு எதிரான அலை மக்களிடம் இருந்து வரும் நிலையில் அவர்களின் அடுத்த தேர்வாக இருப்பது ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு . கடந்த சில நாட்கள்க ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ள மாவட்ட நிர்வாகம் இந்த ஆண்டு பல சவால்களையும் எதார்கொள்ள வேண்டியுள்ளது.

இதில் வெற்றி கிடைக்குமா? அல்லது சுற்றுலா பயணிகளின் அதிருப்திக்கு ஆளாகுமா? அலசி ஆராய்வோம்.

47வது கோடைவிழா இன்று மே 22 ஆம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி மலர் கண்காட்சியும் நடைபெற உள்ளது.

அண்ணா பூங்கா , ஏரி பூங்கா, தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா தோட்டம் ஆகிய இடங்களில் மலர்களால் உருவாக்கப்பட்ட பல வகையான சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன . அண்ணா பூங்காவில் மட்டும் ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்களை கொண்டு பிரம்மாண்ட காற்றாலை, கடல் வாழ் உயிரினங்கள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறை சார்பில் தினமும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். குழந்தைகளுக்கான போட்டிகள் , கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாய்கள் கண்காட்சி, ஏற்காடு குறித்த புகைப்பட கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

தோட்டக்கலை சார்பில் அலங்கார செடிகள் 40 ஆயிரத்திற்கு அதிகமான தொட்டிகளில் நடவு செய்யப்பட்டு தயார் படுத்தப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் ஆபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தேவையான இடங்களில் தானியங்கி மஞ்சப்பை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோடை விழாவிற்காக சேலத்தில் இருந்து ஏற்காட்டுக்கு 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஏற்காடு ஏரி, பக்கோடா பாயிண்ட் ,சேர்வராயன் கோவில், லேடிஸ் சீட் ஆகியவற்றை இணைக்கும் படி மூன்று உள்வட்ட பேருந்துகள் இயக்கப்படும் .

இது தவிர 300 ரூபாய் கட்டண பேருந்தும் அறிமுகப்படுத்தப்படுகிறது . இது இன்று முதல் 26ம் தேதி வரை தினமும் காலை 8.30 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு ஏற்காட்டில் அனைத்து சுற்றுலா தலங்களையும் இணைக்கும் வகையில் பயணித்து நிறைவாக இரவு 7 மணி அளவில் மீண்டும் சேலம் பேருந்து நிலையத்தை வந்தடையும் . இதில் பயணிக்க விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பொதுமக்கள் வசதிக்காக ஆங்காங்கே உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தனை மகிழ்ச்சியான தகவல்கள் இருந்தாலும் மாவட்ட நிர்வாகத்திற்கு இம்முறை கோடை விழாவை நடத்துவதில் சிக்கல்களும் இருக்கின்றன .

முந்தைய காலங்களில் 8 முதல் 10 நாட்கள் வரை நடைபெற்ற கோடை விழா இம்முறை ஐந்து நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையேயும், வியாபாரிகள் இடையேயும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஊட்டி, கொடைக்கானலில் வாகன நெரிசலை குறைக்க ஈ-பாஸ் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதனை விரும்பாதவர்கள் ஏற்காட்டினை தங்கள் முதல் தேர்வாக வைத்துள்ளனர். இதனால் ஏற்காட்டிற்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சில தினங்களுக்கு முன் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தைத் தொடர்ந்து மலைப்பாதையில் பயணிக்கும் வாகனங்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. மேலும் வாகனப் பெருக்கத்தால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் நேர தாமதத்தை கருதி சுற்றுலா பயணிகள் சில இடங்களுக்குச் செல்லாமல் தவிர்த்து வருகின்றனர்.

கோடை விழாவை சாக்காக வைத்து பணம் பார்க்க வேண்டும் என நினைக்கும் புல்லுருவிகள் சிலர் , தரம் இல்லாத உணவுப் பொருட்களை விற்பனை செய்ய முயல்வர். அவற்றை கண்டறிந்து சுற்றுலாப் பயணிகள் யாரும் பாதிக்கப்படாத வகையில் உணவு பாதுகாப்புத் துறையினர் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம்.

இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கும் நிலையில் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணத்தை மகிழ்ச்சியுடன் நிறைவு செய்யும் வகையில் செயலாற்றிட வேண்டும்.

இல்லையேல் உதகை மற்றும் கொடைக்கானலுக்கு உள்ளதை போல் , வரும் காலத்திலும் இனி ஏற்காட்டிற்கும் ஈ பாஸ் வந்துவிடும்.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்