காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் செப்டம்பரில் விரிவாக்கம் – டாஸ்மாக்

டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் முதல் விரிவுபடுத்தப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி 10 ரூபாய் கூடுதலாக கொடுத்து மதுபான பாட்டில் வாங்கிவிட்டு காலி பாட்டில்களை மீண்டும் கடைகளில் வழங்கும் போது 10 ரூபாயை திரும்பப்பெறும் திட்டம் மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. வனப்பகுதிகள் மற்றும் மலைப்பிரதேசங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் , வன விலங்குகள் பாட்டில்களால் பாதிக்கப்படுவதை தடுப்பதுமான இந்த திட்டத்திற்கு பெரும் வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில் இந்த திட்டம் தமிழகம் முழுவதிலும் வரும் செப்டம்பர் முதல் விரிவுபடுத்தப்படும் என உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 10 மாவட்டங்களில் பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டம் நடைமுறையில் உள்ளதாகவும், திரும்பப்பெற்ற பாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு 250 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . விசாரணையின்போது தமிழகத்தில் ஒரு நாளைக்கு 70 லட்சம் பாட்டில்கள் விற்பனையாவதாக டாஸ்மாக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்